மாமியின் நினைவாக….

வடமராட்சி அல்வாய் 
தத்தெடுத்த இளைய மருமகள்
சின்னமாமாவின் முழுமதி
வெண்ணிலாவின் தாலாட்டு
பிறந்த ஊரை விட்டு, புகுந்த ஊருடனும்
உறவுகளுடனும், பழக்க வழக்கங்களுடன்
ஒன்றாகி போன ஊரெழுவின் ஒளி விளக்கு
என் அன்பு சின்ன மாமி
இனி எம்முடன் இல்லை. மாமியின் உருவம் எம்முடன் இல்லாதபோதும், அவருடனான நினைவுகள், எப்போதும் எம்முடன் வாழ்ந்து கொண்டு இருக்கும்.
அந்த நினைவு துளிகளில் சிலதை அவரின் நினைவாக இங்கே பகிர்கிறேன்.

எனக்கு ஒரு ஆறு வயது இருக்கும் போது மாமி என்னை துணைக்காக அல்வாய் குமிழமுனை பிள்ளையார் கோவில் அன்னதானத்துக்கு கூட்டி சென்றது சாதுவாக நினைவில் உள்ளது. அன்று பின்னேரம், ஒரு குட்டித்தூக்கத்துக்கு பிறகு வீட்டை அம்மாவிடம் போகப் போறன் எண்டு அழுது மாமியிடம் அடம் பிடித்ததில் இருந்து மாமியின் நினைவு பதிவுகள் ஆரம்பிக்கிறது.

மாமி வீட்டில எப்பவும் சுறு சுறுப்பாக இருப்பா. ஒரு நாள் கூட , வீட்டில பகல் நித்திரை கொண்டு பார்த்திருக்க முடியாது. எப்பவும் , ஏதோ பர பர எண்டு வேலை செய்து கொண்டு பம்பரமாக இருப்பா. குசினிகுள் வேலை செய்து கொண்டு, அந்த ஜன்னல் கம்பிகளின் ஊடாக வார ஆட்களிடம் ஊர் புதினங்கள் அளவளாடிய படியே மும்மரமா முழு வேலைகளையும் செய்து முடிப்பா.

வீட்டை மாமி அலங்காரம் செய்வது  மாமிக்கு கைவந்த கலை. ஒரு மர showcase  முழுவதும் அழகாக , நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் அழகு பொருட்கள். அதன் மேலே வரிசையாக அழகாக குடும்ப படங்கள். கடைசியாக கனடாவில் இருந்து போக முன், தரணியின் middle school graduation படம்  ஒண்டு கேட்டு வேண்டியிருந்தா. காலத்துக்கு காலம் தளபாடங்களை இடம் மாற்றி வைத்தும் அழகு பார்ப்பார்.

பூ மரங்கள் வளர்ப்பதிலும் மாமிக்கு கொள்ளை பிரியம். வீட்டின் முன்புறம் இரு பக்கமும் பூமரம் நடவென வீட்டு அடிவாரத்துடன் தொட்டிகள் கட்டப்பட்டு அங்கே பூங்கன்றுகள் அழகாக நடப்பட்டு இருக்கும்.  வீடு முழுவதும் பூஞ்சோலையாக விதம்,  விதமாக பூங்கன்றுகளுடன் எப்பவும் அழகாக வைத்திருப்பார். எத்தனை இடப்பெயர்வுகள் வந்த போதும், அவை அழிந்த போதும் மீண்டும் உருவாக்கி அழகாக வைத்திருப்பா.

கணக்கு வழக்கு, தோட்ட வேலையாட்கள் சம்பளம், சாப்பாடு , சந்தைப்படுத்தல், தயார்படுத்தல் என்று எல்லா வேலைகளையும் மாமாவுக்கு நோகாமல் தானே விரும்பி செய்வார்.  மாமா வெளியில் போகும் போது என்ன சேட் போடுவது முதல் அவர் சட்டை பொக்கட்டில் செலவுக்கு காசு வைப்பது வரை, அவருடைய அன்றாட நடவடிக்கைகளை, செய்ய வேண்டிய கருமங்களை பட்டியல் படுத்தி, அவரை ஒரு குழந்தை போல பார்த்து கொண்டார்.

அழகாக, நேர்த்தியாக உடை அணிவது மாமியின் கைவண்ணம். மாமி சேலை கட்டி வந்தால் அப்படி ஒரு அழகாக இருப்பார். கொண்டை போட்டு கொண்டு வெளிக்கிட்டு வந்தால் , ஒரு பாடசாலை ஆசிரியை மாதிரியோ அல்ல ஒரு அரச அதிகாரி மாதிரியோ இருப்பார். நான் சில வேளைகளில் வெண்ணிலாவிடம் பகிடியாக , அம்மாவிடம் எப்படி சேலை அழகாக கட்டுவது எண்டு கேட்டு பழக சொல்வேன்.


மாமியிடம் நெருங்கி பழகும் வாய்ப்பு எனது திருமணத்துடன் அதிகமானது. 2001 இல் சண்டை மும்மரமாக இருந்த தருணத்தில் எமது திருமணம் ஊரில் இடம்பெற்றது. தரை பாதைகள் அற்ற தருணத்தில், முகமாலையில் சண்டை உக்கிரமாக நடந்த நேரந்தில் பாலாலியின் ஊடாக யாழ் சென்றேன், வந்து இறங்கி அடுத்த நாளே பொன்னுருக்கல் நடந்தது. கலியாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கு. இரண்டாவது நாள் வெண்ணிலாவை பார்க்கும் ஆர்வத்தில் மாமி வீட்டை போனேன். குசினிக்குள் இருந்த மாமி gate வரை   ஓடி வந்து, என்ன வீட்டை வந்திட்டீர்கள், பொன் உருக்கினால் வீட்டை வர கூடாது, ஊர் உலகம் என்ன கதைக்கும் என்று பதறியது இன்னும் என் கண் முன்னே நிழலாக உள்ளது.

2003 இல் தரணியுடன் யாழ்ப்பாணம் சென்ற போது, ஆலங்காய் புட்டு, தீயல், பால் அப்பம் என்று ஒரே ஆரவாரமாக இருந்தார். மரக்கரி சமைக்கும் வீட்டில எனக்கு பிடிக்கும் என்று மீனும், மச்சமும் சமைத்து தந்ததை எப்படி மறவேன். அந்த முறை, கரன், மாமியுடன்  நுவரேலியா செல்லும் வாய்ப்பு கிட்டியது. மாமி குளிரில காதை கட்டி கொண்டு நின்றதும், பழைய மலையக நினைவுகளை பகிர்ந்து கொண்டதும் இன்னும் பசுமையான நினைவாக உள்ளது.

மூன்று தடவைகள் மாமி கனடா வந்து இருந்தார். தரணியின் சாமத்திய வீட்டுக்கு தனிய வந்திருந்தார். வரும் வழியில் transit இல் flight தவறி விட்டார். நாங்கள் பயப்பட போறமெண்டு, யாரோ ஒருவரிடம் தொலைபேசி இலக்கம் கொடுத்து, விடயத்தை தெளிவாக எங்களுக்கு அனுப்பி இருந்தார்.  எப்படி மாமி கதைத்தனீர்கள் எண்டால், ஏதோ எனக்கு தெரிந்த English இல் தான் எண்டு சிரித்தபடி கூறினார்.  

இங்கு Ottawa கோவிலில், வருவோர் எல்லோருடனும் கதைத்து அவர்களின் ஊர்,  சொந்தம், உறவினர் எல்லாம் அறிந்து எங்களுக்கு சொல்லுவா. யாரிடமும் அன்பாகவும், பண்பாகவும், நட்பாகவும், கள்ளம் கபடம் இன்றி  தூய்மையாகவும் நெருங்கி பழகுவா.

நாங்கள் விடிய எழும்பி, பரபரப்பாக வேலைக்கு செல்ல, பிள்ளைகள் பாடாசாலை செல்ல, எங்கள் படுக்க அறை தொடங்கி, பிள்ளைகளின் படுக்கை அறை வரை, போர்வைகளை பக்குவமாக மடித்து , அழகு படுத்தி துப்பரவாக வைத்திருப்பார். ஒரு நிமிடமும் வீணாக்காமல், ஏதோ தன்னால் முடிந்த வேலைகளை செய்து வெண்ணிலாவுக்கு பெரிதும் மனதளவில் ஆதரவாக இருந்தார்.

பூக்களை ஆய்ந்து பித்தளை செம்பு தட்டில் தண்ணீருக்குள் போட்டு வாசலில் வைத்து அழகு படுத்துவார்.

சில சமயங்களில் பிள்ளைகளை பார்க்க நான் மதிய இடைவேளைகளில்  வீட்ட வருவன். அந்த வெயில் காலங்களில், தயிரில் இருந்து மோர் தயாரித்து, வெங்காயம், மிளகாய், ஊறுகாயுடன் கலந்து தருவார். அது அமிர்தம் மாதிரி இருக்கும். அதற்காகவே சில நாட்களில், வேலை பழுவிலும் மதிய வேளை நான் வீட்டை வருவதுண்டு.

போன வருடம், கடைசியாக கனடா வந்த போது, பால் அப்பம் செய்து குட்டி, பிரகாஷ்குடும்பம், வெண்ணிலாவின் நண்பிகள் அனைவருக்கும் பரிமாறினா. இங்கு இருக்கும் போது ஆரோக்கியமாகவும் இருந்தார். அவருக்கு இங்கு இருப்பது மிகவும் பிடித்து இருந்தது. தாங்கள் அங்க தனிய தானே, இங்க சின்ன பிள்ளைகளுடன் இருப்பது எவ்வளவு சந்தோசமாக இருக்கு, எண்டு திரும்ப திரும்ப சொல்லுவார். இங்கு இருந்து ஊருக்கு திரும்பும் போது airport இல் வைத்து, பிள்ளைகளும், மாமியும் கண்ணீர் விட்டு அழுதது, இனி அம்மம்மாவை பார்க்க முடியாது என்று அவர்களுக்கு முதலே ஏதோ புரிந்து நடந்தது போல் உள்ளது.

வீட்டில் எல்லோரும் கூடிக்கதைக்கும் போது நான் எப்போதும் மாமியின் கருத்துக்குஆதரவாகவே கதைப்பேன். அதில் அவவுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியில் நானும் மகிழ்ந்திருப்பேன். “அவர் வந்திட்டார் போய் அவரை கவனி” என்று வெண்ணிலாவிடம் கடிந்து கொள்வதில் ஆகட்டும் , “நீங்கள் என்ன பாருங்கோ, சொல்லுறீங்கள்?” என்று தன் கருத்துக்களை மாமிக்கே உரித்தான பாணியில்  தெரிவிப்பதில் ஆகட்டும் அவரின் அன்பும், அரவணைப்பும் கிடைத்தது நான் செய்த பாக்கியம். அதே மாதிரி, எங்களது பிள்ளைகளும், மாமியிடம் கடந்த சில வருடங்களாக ஒன்றாக இருக்க முடிந்தது, மாமியுடன் கூட இருந்தது அவர்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியம்.

மாமி இல்லாத ஊரெழு வீட்டை என்னால் கற்பனை செய்தும் பார்க்க முடியவில்லை. எனது மனதளவில் மாமி இன்னும் ஊரெழு வீட்டில் இருக்கிறார், அடுத்த முறை போகும்போது ஓடி வந்து வாங்கோ வாங்கோ என்று வரவேற்பார் என்ற எண்ணத்துடனே வாழ்ந்து விட தோன்றுகிறது.

உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு….

ஆதவன்..

அதிகாலையில் ஆலடி Tution நோக்கி…

அதிகாலை கும்மிருட்டில் மார்கழி மாத குளிர் காற்று, வீட்டுக்குள் போர்வைக்குள் ஒழிந்து, சுருண்டு படுத்திருந்த போதும் ஊசியாக குத்தியது.

பிள்ளையார் கோவில் திருவெம்பாவை பூசை காண்டா மணி வேறு டாண்…டாண் என்று அடித்து காதோரம் இது கனவோ, நினைவோ என்று தெரியாத மாதிரி தாலாட்டு பாடியது.

பூச்சிகளின் ரீங்காரமும்
பறவைகளின் விடியலுக்கான தேடலும், காதோரம் தேனாக ஒலித்தது. வைரவருக்கு நேந்து விட்ட  சேவல் பொழுது விடிவதை செட்டையை அடித்து கொக்கரக்கோ கொக்கரக்கோ  என்று கூவி ஊரை எழுப்பியது. தூரத்தே காகம் ஒன்று இனி எப்ப புரட்டாதி சனி விரதம் வரும், என்னை அதுவரை தேடுவார் யாருமில்லையா?என்று ஊரெல்லாம் கேட்டு கரைந்தது.

கூடவே அம்மாவின் குரலும் ஒலித்தது.
“அப்பன் விடிய math class இருக்கு எழும்பன்” என்று.
திடுக்கிட்டு எழும்பி நேரம் பார்த்த போது பெரிய முள்ளு ஒன்பதுக்கு கிட்ட  வந்து அவசரத்தை உணர்த்தியது.

இன்னும் 15 நிமிடத்தில்  Math Class என்று பர பரக்க, அரிக்கன் விளக்கை தூண்டி ஒளியை கூட்டி, கிணற்றடிக்கு ஓடினேன்.

கோபால் பல்பொடியை, இருட்டுக்குள் கண்டு பிடித்து, இடம் வலமாகவும்,வலம் இடமாகவும், மேலும், கீழுமாகவும் பெரு விரலால் தேய்த்து விட்டு கும்மிருட்டில் ஒரு மாதிரி உழண்டி கயிரை கண்டுபிடித்து கையில் பிடித்து மெதுவாக விட முதல் சர..சர என கயிறு ஓடி டமால் எண்டு சத்தம், மாரி தண்ணியில் அரைவாசி முட்டிய கிணற்று தண்ணி வாளி விழுந்து தெறித்து முகத்தில் சில்லென்று அடித்தது, கூடவே அம்மாவின் குரல்.

“அப்பன் என்னடா, கிணறு கவனம்”
அம்மாவின் அக்கறை குரலில் தெரிந்தது
அது ‘வாளி அம்மா” என்று பதில் சொல்லி கொண்டே முகத்தில் தண்ணியை அடித்தேன்.
அந்த மாரி குளிரிலும், கிணற்று தண்ணி சூடாக, இதமாக இருந்தது. தொடர்ந்து தண்ணியில் நிற்க வேண்டும் போல் உணர்வு, ஆனால் தண்ணி உடலில் படாவிட்டால் சில்லென்று குளிர்ந்தது.வாயால் வந்த பனி புகையை, 

சிவராத்திரிக்கு பார்த்த சிவப்பு ரோசாவில், வில்லன் கமல் விட்ட சிகரெட் புகை மாதிரி Style ஆக விட்டேன்.

கும்மிருண்டில, பாம்பு நிற்குமோ? என்ற பயத்தில், கால் நிலத்தில் படாமல் பாய்ந்து ஓடி வீட்டுக்கை வந்து அவசரமாக உடுப்பை மாட்டி கொண்டு வெளியே வர, முற்றத்தில் வெள்ளாட்டு குட்டி அவிழ்த்து விட்ட மகிழ்சியில், பின்னங்கால் இரண்டையும் தூக்கி,  துள்ளி விளையாடியது கொள்ளை அழகாக இருந்தது. வெள்ளாடும் “மே..மே..மே”  என்று தன் கிடா குட்டியை தேடி கத்தியது. 

அம்மா கறந்து  மிச்சம் விட்ட பாலை பருக வா என்று தாய் பாசத்தில் தன் பாசையில் அழைத்தது.

அவசரமாக உடுப்பை சரி செய்தேன். அலுமாரி கண்ணாடியில் முகம் பார்த்து சுருள் முடியை இடப்பக்கமாக கோதி விட்டேன். style ஆக  சத்தியா கமல் மாதிரி ஒரு look விட்டேன்.  கட்டினா அமலா எண்டு ஒரு எண்ணம் வேற மனதில் இருந்தது,  இப்ப நினைத்தால் கொஞ்சம் over ஆக தான் தெரியுது. ஊர் Tution இல் நாங்கள் கொஞ்சம் குழப்படியில் famous. அதை அப்படியே maintain பண்ண வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஓடியது.

அம்மா, அப்ப தான் கறந்த
வெள்ளை ஆட்டு பால் Tea உடன் தயாராக நின்றார்
“அம்மா, நேரம் போட்டுது”
என்று அவசரப் படுத்தினேன்
“இல்லை டக்கென்று ஒரு மொடறு
குடித்து போட்டு ஓடி போ”
வாங்கி ஒரே மொடக்கில்  குடித்து விட்டு முன் வீட்டை எட்டி பார்த்தேன். 

அரிக்கன் விளக்கும் , நான்கு கால்களும் நிழலாக தெரிந்தன.
IPKF யாழ் மண்ணில் அகோர தாண்டவம் ஆடிய  நாள் முதல் பக்கத்து வீட்டு நண்பியும் நானும் சேர்ந்துTuition போவது பாதுகாப்பு எண்டு அம்மாமார் எடுத்த முடிவு. அந்த காலத்தில் அமைதி படை எந்த பத்தைக்க எலி பிடிக்க படுத்திருக்கும் எண்டு ஒருவருக்கும் தெரியாது. சேர்ந்து போனால் ஒரு பாதுகாப்பு எண்டு பெற்றோர் மனதில் ஒரு இயலாமை.

நாங்கள் எங்களுக்க ஒரு முடிவு எடுத்தோம், ஒழுங்கை முந்தல் வரை ஒன்றாக போவது, பலாலி வீதி வந்தால், நீ யாரோ? நான் யாரோ?  ஒரு 100 m ஆவது இடைவெளி விட்டு போக வேணும். அடுத்தது, இந்த விசயம், உற்ற நண்பர்களுக்கு கூட தெரிய கூடாது, தெரிந்தால், பெடியளின் 

பகிடி வதை தாங்க முடியாது. இல்லாது, பொல்லாது கண், வாய், காது எல்லாம் வைத்து கடிப்பான்கள். கதை கட்டி, black board எல்லாம் பேர் எழுதி நாத்தி போடுவான்கள்.

எங்கள் வீட்டு ஒழுங்கை தாண்டினால் ஒரு பெரிய புளிய மரம். வீட்டு ஒழுங்கை மூலையில் நிற்க்கும் புளிய மரத்தை பகலில் கடக்கவே வயிற்றை கலக்கும். அகண்டு விரிந்து பரந்து நிற்கும் மரத்தின் கீழ் பகலிலே இருட்டாக இருக்கும். விடியக்காலையில் கும்மிருட்டாக இருக்கும். அந்த  புளிய மர பக்கத்தில் இருக்கும் இழுப்பை மரத்தில், இரவில் வெளவால்கள் வேறு தங்கி இருந்து, இரவெல்லாம் வினோத ஒலி  எழுப்பும். அந்த காலத்தில் இலுப்பை பழ காலத்தில் வானத்தில் நிறைய வெளவால்களை பார்க்கலாம். இப்ப அவை எல்லாம் எங்க போச்சினமோ தெரியாது.

அந்த புளிய மரத்தில் யாரோ எப்பவோ தூக்கு போட்டு வேற செத்தவயாம், முனி எல்லாம் இருக்கு , இரவு கிட்ட போனால் அவ்வளவு தான் எட்டு கோவில் திருவிழா வெளி வீதியில் வைத்து செட்டியார் சொல்லி மனதில் பயத்தை உண்டாக்கி விட்டான். 

இருவரும் ஒருவர் பின் ஒருவராக கண்ணை மூடி கொண்டு புளியடி கடப்போம். சைக்கிள் சில்லு ஒண்டோட ஒண்டு முட்டுபட்டு விழுற மாதிரி மிதிப்போம்.

அந்த மாரி குளிர் காற்று கண்ணில் பட்டு, கண்ணால கண்ணீர் வந்து காய்ந்து போகும்.

பாம்பு புற்றொண்டு வேறு
புளியடியில் உண்டு. சில சமயம்
ஒரு விதமான வாடை புளியடையில் அடிக்கும்.
நண்பன் ஒரு முறை சொன்னான், அது பாம்பு கொட்டாவி எண்டு, அதற்கு பிறகு
புளியடி கடக்கேக்க , சைக்கிள்
ஆவி கலைத்தும் பிடிக்காத மாதிரி
வானத்தில் பறக்கும்.
புளியடி தாண்டி , நாலு மிதி மிதித்தால்
பாலாலி வீதி. அதிலிம் ஒரு பயம்
ஆமிக்காரன் பதுங்கி இருகிறானோ,
கண்டவுடன் துவக்கை நீட்டுவானோ எண்டு குளிர் பட்டு
கண்ணோரம் கண்ணீர்
எட்டி பார்க்கும் கண்ணை கசக்கி சுற்று முற்றும் பார்ப்பேன்.
இப்படியே பாலாலி வீதி ஏறினவுடன்அப்பாடா எண்டு ஒரு
நிம்மதி. அதிகாலை சந்தைக்குபோவோர் சிலர்
மூட்டைக்கு மேல், மூட்டை கட்டி
வண்டி மிதிப்பார்கள்.மெல்லிய புகாரின் ஊடாக சில ஊர் பரிச்சிய முகங்கள் தெரிவார்கள். சில சமயம், மாட்டு வண்டில் சலங்கை ஒலிக்க, வீறு நடை போடும்.

தம்பி கடை முன்னே, பேக்கரி காரன் சைக்கிளில் பெரிய பெட்டியில கட்டி பாண் இறக்குவான். அந்த “roast பாண்” வாசம்  காத்தில கலந்து வந்து பசி எடுக்க பார்க்கும். 

அப்படியே தம்பி கடை பக்கதில் இருக்கும் பனம் காணியை ஒரு பார்வை பார்ப்பேன்.
ஆச்சி (அம்மம்மா)  நான் சின்னனாக இருக்கேக்கை ஒரு தடவை சொன்னா,
அந்த காணியில் பனம் உச்சியில்
இருக்கும் பனம் கரும் குளவி குத்தி
பொன்னரின் பேரன்
பொட்டெண்டு போட்டான் எண்டு
மனதில பயத்தோட, சில் வண்டு
பறந்தாலும் குளவியோ
எண்டு ஆராய்ச்சி நடக்கும்.
இப்படியே நாலு மிதி மிதித்தால்
பிள்ளையார் கோவில், அரச மரம்
மனதளவில் ஒரு கும்பிடு, இந்த முறையும் math test இல நான் தான்
முதலாவதாக வரவேண்டும்.
திருவெம்பாவை ஆயத்தம் வேற
கோவிலில் களை கட்டும். சில செம்பாட்டு வெள்ளை வேட்டிகளும், நூல் சேலைகளும் கோவில் உள்ளே பய பக்தியாய் கன்னத்தில் போட்டு கொள்ளும். 

கோவில் வீதியோர விளக்கில் வீதி எங்கும் கொஞ்சம் மங்கலாக வெளிச்சம் தெரியும். அப்படியே கோவில் தாண்டினால் சங்க கடை. வாசலில் குட்டை நாய் ஒன்று தெருவில், போவோர், வருவோர் எல்லாரையும்  கலைத்த களைப்பில் சிவனே எண்டு படுத்திருக்கும்.

இன்னும் நாலு மிதி மிதிக்க, இடிந்து விழுந்த பழைய சந்தை கட்டடம் தெரியும். பக்கத்தில் ஒரு கேணியும் உண்டு. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அந்த கேணி குப்பை தொட்டியாக தான் இருந்தது. ஊர் குப்பை எல்லாம் போட்டும் என்னென்று  இந்த கேணி முட்டாமல் இருக்கு எண்டு ஆச்சரியப்பட்டதுண்டு.

கேணி தாண்ட ஆலடி முகப்பு தெரியும் என் முகமும் மலரும், அப்பாடா பாதுகாப்பாக, morning math class வந்து விட்டோம்.  அன்றைய நண்பர்களின் வரவுக்காய், தோழிகளுடனான சீண்டலுக்குமாய் மனம்  ஆவலோட எதிர் பார்க்கும்

மெழுகு திரி
ஒளியில்
தேற்றம் நிறுவிய
கதையும்
தோழிகளிடம்
குறும்பு செய்யும் கதையும்
இன்னும் ஒரு முறை
பார்ப்போம்….

​Operation ரத்தினேஷ்வரி மாமி

​Operation ரத்தினேஷ்வரி மாமி

இது அம்மா நேற்று ஊரில் இருந்து வந்த போது கொண்டு வந்த மாங்காய். ஊரெழுவில் எங்கள் வீட்டு முற்றத்தில் காய்த்த காய் என்று அம்மா summer க்கு ஊருக்கு போய் வரும் போது ஆய்ந்து கொண்டு வந்தா.

என்ற சின்னன், இளவஞ்சிக்கு மாம்பழம் என்றால் அப்படி ஒரு விருப்பம். 

அப்பம்மா ஊரில் இருந்து வரேக்க எனக்கு மாம்பழம் கொண்டு வாங்கோ எண்டு சொல்லி இருக்கிறாள்.

அம்மாவும் முத்தின  காயா ஆய்ந்து கொண்டு வந்து ” டேய், இதை பழுக்க வைத்து அவளுக்கு கொடு” எண்டு நாலு காய் தந்தா.

பழைய நினைவுகள் இரை மீள , பழுக்க முதல் இண்டைக்கு இதை வெட்டி சாப்பிட்ட போது, முன்பு சிறு வயதில் மதில் பாய்ந்து,  ஆய்ந்து,  குத்தி சாப்பிட்ட பழைய நினைவுகள் வந்து போனது.

அம்மாவுக்கு தெரியாமல் , நானும், தம்பியும், இன்னும் சில அயல் வீட்டு நண்பர்களும் சின்னவயதில் செய்த  தாக்குதல்

“ஒபெரேசன் ரத்தினேஷ்வரி மாமி”

எங்கள் வீட்டு அயல் வீடு ரத்தினேஷ்வரி மாமி வீடு, சுற்று மதிலோட நிறைய மரங்கள். எங்கள் வீட்டு பக்கமாக செம்பாட்டான் மாமரம் கவனிப்பாரற்று காய்த்து தொங்கும். அணில் தின்னுவது அரைவாசி, மிஞ்சம் அப்படியே தகர கொட்டில் கூரை மேல ” டமால் டமால்” எண்டு விழும்.

அதை பார்க்க, பார்க்க எப்படா இதை ஆய்ந்து தின்னலாம் எண்டு எனக்கும், தம்பிக்கும் எண்ணம் ஓடும்.

கன நாள் ரெக்கி  எடுத்து ஒரு Sketch போட்டம்.

அம்மா மத்தியானம் சாப்பிட்டவுடன் ஒரு குட்டி தூக்கம் போடுவா. அந்த நேரம் தான் attack time, தாக்குதல் நேரம்.

தம்பியும் நானும் கண்களால் கதைத்து அம்மாவின் நித்திரையை உறுதி செய்தோம்.

பூனை மாதிரி குசினிக்க போய் ஒரு paper இல உப்பு கட்டி , இன்னுமொரு paper இல மிள்காய் தூள் சுத்தி எடுத்து வர வேணும்.  எடுத்தது தெரியாம அப்படியே திருப்பி வைக்க வேணும்,

அம்மாவிடம் மாட்டினா மானம், மரியாதை , என்ன பழக்கம், அது, இது எண்டு sentimental கதைத்து எங்களை நாங்களே குற்றவாளிகள் என்று மனிசி feel பண்ண வைத்திடும்.

எங்கள் வீட்டு மரம் ஒன்றில் ஏறி,  மாமி வீட்டை நோட்டம் போட்டன். அவையும் மத்தியானம் குட்டி தூக்கம்போல, ஆள் நடமாட்டம் இல்ல. செம்பாட்டான் மாமரம் அந்த பாரத்திலும் சோழ காற்றில  அங்கையும், இங்கையும் ஆடி வா வா எண்டு கூப்பிட்டது.

ஆனா ஒரு பிரச்சனை

மாமி  வீட்டை இரண்டு அல்சேசன் நாய்கள் இருக்கு, கட்டி இருகேக்கையே அதுகள் குரைக்கிற சத்தம் கேட்டாலே எங்களுக்கு மூத்திரம் போகும். எங்கட Plan படி, நான் அவர்களின் வளவில், நிலத்தில கால் வைக்க மாட்டன். மதிலில் இருந்து தகர கூரை, after the attack,  தகர கூரையிலிருந்து மதில். நாய்களிடம் மாட்டுப்படாம போட்ட திட்டம்.

எங்கட நல்ல காலத்துக்கு  அண்டைக்கு அதுகளும் முன் பக்கம் ஏதோ busy போல, பின் பக்கம் ஒரு ஈயாட்டம் இல்லை.

தம்பிக்கும், பக்கத்து வீட்டு சங்கருக்கும் சிக்னல் போட்டன்

Route Clear, Operation ON.

கஸ்டபட்டு மதில் மேல எறி , அதிலிருந்து ஒரு இரண்டு அடி தள்ளியிருந்த தகர கொட்டில கூரை மேல பாய்ந்தன்.

கீழ நீண்ட தம்பியின் கண்களில் ஒரு ஆச்சிரியம், எப்படி அண்ணா இப்படி தாவினான் எண்டு, பெருமையாக அவனை பார்த்தன், பார்வையில நான் பெரியவன் இதெல்லாம் சின்ன விசயம் எண்டதை புரிய வைத்தன். பின்னால ஏதாவது போட்டியாக கதைத்தான் என்றால் இதெல்லாம் உதவும்.

கை போன போக்கில் நாலு காயை பிடிங்கி எங்கள் வீட்டு பக்கமாக எறிந்து போட்டு, மாங்காய் ஆய்ந்த போது கையில சீறின மாங்காய் பாலை கால்சட்டையில் துடைத்து கொண்டு திரும்ப கூரையின் விளிம்புக்கு ஓடி வரவும் , தகர சத்தத்தை கேட்டு, முன்னுக்கு நின்ற நாய்கள் பின்னுக்கு ஓடி வரவும், நெஞ்சு அப்படியே திக் திக் எண்டு அடித்தது. மதிலில் இருந்து கூரைக்கு பாயேக்க இருந்த சுகம், கூரையில் இருந்து மதிலுக்கு பாயேக்க இல்ல. கொஞ்சம் இலக்கு தப்பு பாய்ந்தால், அவை வளவுக்க விழுந்து விடுவன். சிந்திக்க நேரம் இல்லை, நாய்கள் கிட்ட வருகினம். 

கண்ணை இறுக்கி மூடி கொண்டு ஒரு தாவல் தாவினேன். ஊரழு பிள்ளையார் புண்ணியம், correct landing on the மதில்.
நாலு கால் பாய்ச்சலில்,ஓடி வந்த நாய்கள், நான் எங்கள் வீட்டு பக்கம் குதிக்க முதல் , அதுகள் மதிலால பாய்ந்திடும் போல ஓடி வந்து மதிலோட sudden break போட்டு தங்கள் தோல்வியை மறைத்து குரைக்க தொடங்கின.
இங்க  தம்பியும், பக்கத்து வீட்டு சங்கரின் கண்களில் அண்ணா ஒரு வீராதி வீரனாக தெரிந்தான். நானும் ஒண்டுக்கும் பயப்படாத ஆள் மாதிரியும், இதெல்லாம் சின்ன விசயம் மாதிரியும் அவன்களுக்கு ஒரு படம் போட்டன் 

எங்கள் பக்கம் பிடிங்கி, எறிந்த மாங்காயை பொறுக்கி கொண்டு பின் வாழைத்தோட்டத்துக்க ஓடினம். அங்க மறைவாக ஒரு இடம் பிடித்து மாங்காயை  கல்லில குத்தி அதில் வந்த முதல் பெரிய துண்டை (எனக்கு) எடுத்து , ஓடேக்க சிந்தி சிதறி மிஞ்சி இருந்த உப்பிலயும், மிளகாய் தூளிலும் நேற்று இறைத்த வாழைத்தோட்ட பாத்தியில் ஒழிந்திருந்து சாப்பிட்ட thrill, taste இண்டைக்கு வரல்ல.
Note: Next day, ரத்தினேஷ்வரி மாமி அம்மாவிடம் 10 மாங்காயை கொடுத்து, “ஆதவன்நேற்று மதில பாய்ந்தவன், காலை, கைய உடைக்கப்போறான், இதை பிள்ளைகளிட்ட கொடுங்கோ “

எண்டு சொன்னதும், எங்கட ரகசிய operation, எப்படி இவக்கு leak ஆனது எண்டு நானும், தம்பியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தோம். இன்று வரை மாமிக்கு எப்படி தெரியுமெண்டு எங்களுக்கு தெரியாது.

திலீபன் ஊரெழுவில் பூத்தகொடி

 

logo_lt_col_thileepanயாழ் மாவட்டத்திலுள்ள ஊரெழு என்னும் அழகிய பனைமரங்கள் கொஞ்சி விளையாடும் கிராமத்தில் ஆசிரியர் திரு. இராசையா தம்பதிகளின் கடைசி மகனாகப் பிறந்த பார்த்திபன் வாழ்வின் ஆரம்பத்திலேயே மிகவும் துர்ப்பாக்கியசாலியாக இருந்துவிட்டார். பத்துமாதம்வரை அன்புப்பால் ஊட்டி சீராட்டி பாராட்டி வளர்த்த அன்னையின் அரவணைப்பை பத்தாவது மாதம் முடிவில் பறிகொடுத்துவிட்டார் திலீபன். பிஞ்சுக்கால்களை ஊன்றி அந்தக் குழந்தை தத்தித்தத்தி நடக்கவேண்டிய பருவத்தை கொஞ்சி மகிழ்;ந்த அன்னை நெஞ்சில் மகிழ்வோடு பார்க்கமுடியாமல் பரலோகம் போய்விட்டார்.
தாய் இறந்தபோது அக்குடும்பத்தின் மூத்த மகனான இளங்கோவிற்கு வயது ஒன்பது மட்டுமே. பெண்குழந்தைகள் இல்லாத காரணத்தாலும் இளங்கோ சிறுவயதுப் பையன் என்பதாலும் பார்த்திபனின் தந்தை இராசையா ஒரு பள்ளி ஆசிரியர் என்பதாலும் குழந்தை பார்த்திபனைக் கவனிக்க வீட்டில் யாரும் இல்லை.
ஊரெழுவில் இருந்து ஒரு மைல் தொலைவில் உள்ள கரந்தன் என்ற சிற்றூரில் பார்த்திபனின் அம்மாவின் தாயும் சிறியதாயான செல்வி இராசலட்சுமியும் வசித்துவந்தனர். பார்த்திபனின் பாட்டி வயதானவர் என்பதால் அவரின் சிறிய தாயாரான செல்வி. இராசலெட்சுமியிடம் பார்த்திபனைக் கொண்டு சென்று விட்டுவிட்டு வந்தார் இராசையா அவர்கள்.
பிஞ்சுப்பருவத்தில் அன்னையை இழந்த பார்த்திபன் சிற்றன்னையின் அணைப்பில் வளரத் தொடங்கினார். இராசையா ஆசிரியரும் பார்த்திபனின் சகோதரர்களும் ஒவ்வொரு விடுமுறை நாட்களிலும் பார்த்திபனைப் பார்த்துவிட்டு வருவார்கள். அவருக்கு ஒன்றரை வயதான போது சகோதரர்கள் அல்லது தகப்பன் அவரைப் பார்க்கவரும்போது தானும் அவர்களுடன் வரப்போவதாகக் காலைக் கட்டிக்கொண்டு அழுவார். அடம்பிடிப்பார். ஆனால் அவருக்கு இரண்டு வயதான போது அவரை ஒரேயடியாக வீட்டுக்கு அழைத்துவந்துவிட்டார் தந்தை.
உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்தில் தான் படிப்பித்துக்கொண்டிருக்கும்போது கைக்குழந்தையையும் கூடவே அழைத்துச் செல்வார் தந்தை.
மூன்று வயதில் அவனை உரும்பிராயில் இருந்த பாலர் பாடசாலை ஒன்றில் தந்தையார் சேர்த்துவிட்டார். உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்திற்கு மிக அண்மையிலேயே இப்பள்ளி இருந்தது. பாலர் பாடசாலை முடிந்ததும் அப்பாடசாலைக்கு முன்பாக உள்ள பலசரக்குக் கடையில் தகப்பனுக்காகக் காத்துக்கொண்டிருப்பார் பார்த்திபன். உரும்பிராய் விநாயகர் ஆலயத்துக்கு முன்பாக உள்ள அந்தப் பலசரக்குக் கடை முதலாளி பார்த்திபனுக்காகத் தினமும் இனிப்பு வழங்குவார்.
அவர் வளர வளர அவரால் தந்தைக்கும் சகோதரர்களுக்கும் பிரச்சனைகள் குறைய ஆரம்பித்தன. தன்வேலைகள் தானே கவனிக்கும் பக்குவத்தை அவர் மிகச்சிறுவயதிலேயே பெற்றுவிட்டார்.
பாலர் கல்வியை முடித்துக்கொண்ட பார்த்திபனை தான் கல்விகற்பித்துக்கொண்டிருந்த உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்திலேயே ஆரம்பக் கல்வி கற்பிப்பதற்காக சேர்த்துவிட்டார்.
சில வருடங்களின் பின் தந்தை இராசையாவிற்கு இடம்மாற்றம் வந்தது. அவர் உரும்பிராய் சந்திரோதய வித்தியாலயத்திற்கு மாற்றப்பட்டார். தனித்து நின்ற பார்த்திபனையும் அங்கேயே கொண்டுபோய்ச்சேர்த்துவிட்டார். சிறுவயதிலேயே அவர் படிப்பில் புலியாக விளங்கினார். ஐந்தாhம் வகுப்பு மட்டும் முதலாவதாகவே வந்தார். ஒருவருடத்தில் படித்து முடிக்க வேண்டிய பாடங்களை எல்லாம் இரண்டு மூன்று நாட்களில் இரவுபகலாக இருந்து வாசித்துமுடித்துவிடுவார். சின்னவயதில் இருந்தே அறிஞர்களின் நூல்களை விரும்பி வாசிக்கத் தொடங்கினார். சிறுவயதிலேயே அவருக்கு ஆஸ்த்துமா வியாதி இருந்தது. குளிரில் மூச்சுவிட முடியாமல் திணறுவார். அடிக்கடி அவரை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்வார் தந்தை.
சிறுவயதில் இருந்தே வானொலிப்பெட்டியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு கிரிக்கட் கொமன்றி கேட்பதில் பார்த்திபனுக்கு அதிக விருப்பம் இருந்தது. சில சமயம் சாப்பாட்டில் கூட அக்கறையின்றி அதைக் கேட்டுக்கொண்டு இருப்பார். ஐந்தாம் வகுப்புப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த அவர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தார். ஒரே தடவையில் க.பொ.த பரீட்சையில் சித்தியடைந்தார். அப்போது இரவு பகலாக ஓய்வு உறக்கம் இன்றி படித்ததன்காரணமாக அவரது கண்கள் பாதிக்கப்பட்டன. அப்போது யாழ் ஆஸ்பத்திரியில் கண்வைத்திய நிபுணராக டாக்டர். திருமதி கண்ணுத்துரையிடம் அவர் சிகிச்சை பெற்றார். அவர் ஒவ்வொரு நாளும் நீண்ட நேரம் படிக்கக் கூடாது என்று அறிவுறுத்தியது மட்டுமன்றி கண்களுக்கு கண்ணாடியையும் சிபாரிசு செய்தார். அதிலிருந்துதான் அவர் கண்ணாடி அணியத் தொடங்கினார். இதன் காரணமாக முதலாம் தடவையில் அவரால் க.பொ.த உயர்தரவகுப்பில் சித்தியடைய முடியாமல் போய்விட்டது. இரண்டாம் தடவை திறமையாகச் சித்தியடைந்த அவருக்கு யாழ் பல்கலைக்கழக வைத்திய பீட மாணவனாகப் படிப்பதற்கு அழைப்பு வந்தது. அதை ஏற்க மறுத்து விடுதலைப் போராட்டத்தில் குதிக்க அவர் முடிவு செய்தார்.
1974ம் ஆண்டு தை மாதம் யாழ்நகரில் நடைபெற்ற நாலாம் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொண்டார். ஆனால் தமிழ் இனத்தின் துரோகி ஒருவரின் கட்டளை மூலம் ஒன்பது அப்பாவித்தமிழர்கள் அங்கு அவர் கண்முன்னால் கொல்லப்பட்டதைக் கண்டு பார்த்திபனின் இதயம் துடிதுடித்தது.
தமிழன் சுதந்திரமாக வாழவேண்டும் என்ற விடுதலைத்தாகம் அந்தச் சிறுவயதில் அவர் நெஞ்சில் நெருப்பாகப் பற்றத்தொடங்கியது.
யாழ் இந்துவில் பயிலும்போது படிப்பிலும் விளையாட்டிலும் மிகவும் திறமைசாலியாக விளங்கினான். விளையாட்டுத்துறையின் தலைவனாகவும் சிறந்த சதுரங்க விளையாட்டு வீரனாகவும் திகழ்ந்தார். 1977ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இனக்கலவரத்தில் யாழ்ப்பாணம் நோக்கி வந்த தமிழ் அகதிகளுக்கு தன்னாhல் முடிந்த உதவிகளைச் செய்தார். அப்போது அவருக்கு வயது 13. அந்த இனக்கலவரம் திலீபனின் நெஞ்சில் சுதந்திர தாகத்தை வெகுவாகக் குழப்பத்தொடங்கியது. அந்த வயதிலேயே விடுதலைப்புலிகளின் அதிரடித்தாக்குதல்களை மானசீகமாக மகிழ்ச்சி ததும்ப வரவேற்றார் திலீபன்.
தமிழ்த் துரோகி துரையப்பா கொலை செய்யப்பட்டபோது ஆனந்தக் கூத்தாடியவன் திலீபன். தமிழ் மக்கள் கொடுமையான முறையில் கொலை செய்யப்பட்டதைக் கண்டு அவர் மனம் தவித்தது. தமிழ் மக்களைக் காப்பதற்காக தன் உயர்கல்வியை உதறித்தள்ளிய திலீபன் விடுதலை இயக்கத்தில் சேர்ந்து தமிழ் மண்ணுக்காகப் போராடத் தீர்மானித்தார். தமிழ் மக்களைக் காப்பதற்காக அல்லும் பகலும் போராடிக்கொண்டிருந்த தமிழ் இனத்தின் தேசியத்தலைவர் மேதகு. வே.பிரபாகரனுடன் எப்போதாவது இணையவேண்டும் என்பதே அவரின் கனவாகவும் இலட்சியமாகவும் இருந்தது. தலைவர் பிரபாவை தன் மானசீகக் குருவாக வைத்துக்கொண்ட பார்த்திபன் 1983ம் ஆண்டு தமிழீழவிடுதலைப்புலிகள் இயக்கத்தின் அங்கத்தவனாகச் சேர்ந்தான். ஆரம்பத்தில் கப்டன் பண்டிதருடன் இணைந்து பிரச்சார வேலைகளைக் கவனித்துவந்த அவர் பின் மானிப்பாய் வட்டுக்கோட்டைப் பகுதிப் பிரச்சாரப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 1983ம் ஆண்டின் கடைசிப்பகுதியில் தமிழ்ப்பகுதியில் பிரச்சார வேலைகளில் ஈடுபட்ட விடுதலைப்புலிகளுக்கு தலைக்கு மேல் ஆபத்து இருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த ஆபத்து இராணுவத்திடம் இருந்து மட்டுமல்ல வேறு பல வழிகளிலும் உண்டு. இவைகளை எல்லாம் எதிர்நீச்சல் போட்டு தன் பணியில் வெற்றி கண்டவர் திலீபன்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ்பிராந்தியத் தளபதியாகக் கடமையாற்றிய திரு. கிட்டு அண்ணா திலீபனின் செயல்திறனிலும் அயராத முயற்சியிலும் நம்பிக்கை வைத்தார். கடமை கண்ணியம் கட்டுப்பாடு உறுதி உழைப்பு எல்லாவற்றிலுமே திறமையாகத் திகழ்ந்த திலீபன் அவர்களை தமிழீழ விடுதலைப்புலிகளின் யாழ்மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளனாக நியமிக்கும்படி தலைவர் பிரபாவிடம் பரிந்துரை செய்தார் கிட்டு. திலீபன் அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டபின் தமிழீழ விடுதலைப்புலிகளின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமாயிற்று.
திலீபன் தமிழ் மக்களை அரசியல் மயப்படுத்துவதற்காக அல்லும் பகலும் உழைத்த அதே வேளை தளபதி கிட்டுவுடன் இணைந்து பல தாக்குதல் திட்டங்களையும் வகுத்தார்.
அநேகத் தாக்குதல்களில் தானே நேரடியாக ஆயுதம் ஏந்திப் போராடினார்.
பலமுறை இராணுவத்திடம் பிடிபட்டுத் தப்பினார். வல்வையில் ஏற்பட்ட விடுதலைப்புலிகள்- இராணுவ நேரடி மோதல் ஒன்றில் வயிற்றில் குண்டுபாய்ந்து சத்திரசிகிச்சைக்கு ஆளாக்கப்பட்டார்.
‘களத்தில்” என்ற மாதப்பத்திரிகை நடத்தி தன் எண்ணங்களை எழுத்துருவில் வடித்தார். இயக்கக் கொள்கைகளை மிகஎளிதாக மக்களுக்கு விளங்கவைத்தார். கட்டுரைகளை எழுதும் போது அது மக்களுக்குப் புரியக் கூடியதாக இருக்கவேண்டும் என்பதில் மிகக்கவனமாக இருப்பார். திலீபனின் முயற்சியினால் பல உப அமைப்புக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பண்ணையில் விளைந்து அதிக பலனைக் கொடுக்கத் தொடங்கின. அவற்றில் சில:
1. தமிழீழ விடுதலைப்புலிகளின் மாணவர் இயக்கம்
2. தமிழீழ மகளிர் அமைப்பு
3. சுதந்திரப்பறவைகள் அமைப்பு
4. தமிழீழத் தேசபக்தர் அமைப்பு
5. தமிழீழ விழிப்புக்குழுக்கள்
6. கிராமியநீதிமன்றங்கள்
7. சுதேச உற்பத்திக்குழுக்கள்
8. தமிழீழ ஒளி ஒலி சேவைக் கட்டுப்பாட்டுச் சபை
9. தமிழர் கலாச்சார அவை
மற்றும் சில தொழிற்சங்கங்களும் திலீபனால் அமைக்கப்பட்டு மிகத்திறமையாக செயற்பட்டு வந்தன.

திலீபன்
ஆக்கிரமிப்புக்கு எதிரான குறியீடு

இன்றைய உலகின் இயங்கு திசையுடன் இணைந்து தமிழ்த் தேசிய இனமானது தனது இலட்சிய இலக்கினை நோக்கி மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.
இந்தப் போராட்ட நகர்வில் அசையும் அசையாச் சொத்துக்களின் இழப்புக்களும் பெறுமதிமிக்க மனித இழப்புக்களும் ஏற்பட்டாலும் இந்த இழப்புக்கள் யாவற்றையும் இது அசாத்திய மன உறுதியுடன் தாங்கிக்கொண்டு அழுகைக்கும் விம்மல்களுக்குமிடையே அடுத்த சந்ததியின் எதிர்கால நலன்களை மனதிருத்தி மென்மேலும் உறுதிபெற்று முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்ற தமிழீழத்தேசிய விடுதலைப்போராட்டம் அவ்வப்போது ஏற்படுகின்ற திருப்புமுனைக;டாக முன்னிலும் வேகமாக ஒரு பாய்ச்சலில் தடைகளைக் கடந்து முன்நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
தமிழீழப் போராட்ட வரலாற்றில் பல திருப்புமுனைகள் இருந்தாலும் 1987ம் ஆண்டு இந்திய அமைதிப் படையின் வருகையினூடாக ஏற்பட்ட திருப்புமுனையானது தமிழீழ மக்களின் விடுதலைப்பற்றை மேலும் உறுதி கொள்ளவைத்ததுடன் போராட்டத்தைப் பலப்படுத்தி நகர்வுகளை முன்னெடுக்கும் உந்து சக்தியையும் ஏற்படுத்தியது.

உலகுக்குக் காந்தியம் போதித்துக் கொண்டு அதே வேளையில் தனது வல்லரசுப் பசிக்கு தீனி போட முயல்கின்ற இந்தியா இந்தியாவின் வரையறுக்கப்பட்ட எல்லைக் கோட்டுக்குள் வாழ்கின்ற தேசிய இனங்களின் எழுச்சிகளை மழுங்கடிக்கச் செய்து அல்லது கொன்றொழித்து வருகின்ற அதேவேளை ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பதாக அல்லது விடுதலைப்போராட்டத்திற்கு ஒத்துழைப்புக் கொடுப்பதாக ஒரு பொய்த் தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை வேரோடு பிடுங்கியெறிவதற்hகக அமைதிப்படை என்ற போர்வையில் தனது இராணுவத்தை நேரடியாக தமிழீழப் பிரதேசங்களில் கொண்டு வந்து இறக்கியது.
இந்த அமைதிப்படை வெறும் மாயமான் என்று அறியாத தமிழீPழ மக்கள் இவர்களை மாவிலைத் தோரணங்கட்டி மகரகும்பங்களுடன் வரவேற்றது உண்மைதான். நாட்கள் சென்றன. சிறீலங்கா இராணுவ அடாவடித்தனங்களும் சிங்களக் குடியேற்றங்களும் முன்னிலும் பல மடங்கு வீரியம் பெற்றன. அமைதிப்படை அமைதியாக இருந்தது. தமிழீழ மக்கள் யாருடனும் கலந்து கொள்ளாமல் தமிழீழ மக்கள் சார்பில் இந்தியாவும் சிறீலங்காவும் செய்த ஒப்பந்தம் அப்படியே இருந்தது. அற்ப சொற்ப சலுகைகளைக் கொண்டு ஒப்பந்தச் சரத்துக்களைக் கூட லங்கா அரசு அப்பட்டமாக மீறிய போதும் அமைதிப்படை அமைதியாக இருந்தது. ஆயுத ஒப்படைப்பு நடைபெற்ற பின்பு தமிழீழ மக்களின் பாதுகாப்புக்கு இந்திய உத்தரவாதம் அளித்த பின்பும் கைதுகள் நடைபெற்றன. ….அகிம்சைப் போர்வைக்குள் பதுங்கிக் கொண்ட இந்தியாவை சர்வதேசத்தின் முன் தோலுரித்துக் காட்ட வேண்டிய காலம் வந்த போது இதுவரை காலமும் சிறிலங்கா ஆயுதப்போராட்டக்களத்தில் முன்னின்ற திலீபன் அகிம்சைப் போரில் குதித்தான்.
சிங்களக் குடியேற்றங்களை நிறுத்துதல் தமிழ்க் கிராமங்கள் பள்ளிக் கூடங்களில் நிறுவப்பட்டிருந்த இராணுவ முகாம்களை அகற்றுதல் சிறீலங்கா பொலிஸ்நிலையங்களை நிறுவுதலை நிறுத்துதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதத்தை திலீபன் ஆரம்பித்தான். தார்மீகமே உலகை உய்விக்கும் வேதமென்று உருப்போட்டுக் கொண்டிருந்த இந்தியாவுக்கெதிராக திலீபன் சாகும்வரை சாத்வீகப் போர் புரிந்தான்.
நல்லை மணல் வீதியில் குவிகின்ற மக்கள் வெள்ளத்தின் நடுவே பன்னிருநாட்களாக துளி நீரும் அருந்தாது சிறுகச் சிறுகச் சாவைத் தழுவிக் கொள்கின்ற போதும் அமைதிப்படை அமைதியாக இருந்தது. இந்தியாவின் சாத்வீக முகம் கிழிந்தது. அதன் உண்மையான விகார முகம் தெரியத் தொடங்கிய போது மக்கள் கொதித்தெழுந்தனர். தங்கள் பொய்முகம் தெரியத்தொடங்க இந்திய அமைதிப்படையும் உள்ளுக்குள் கொதிக்கத் தொடங்கியது.
சர்வதேசங்களில் எல்லாம் இந்தியா பற்றிய போலி முகத்திரை கிழிந்து தொங்கியது. ஆத்திரமுற்ற இந்தியா தான் வந்த உண்மையான நோக்கத்தை நிறைவேற்றத் தொடங்கியது. முன்னரை விட மக்கள் கோரமாகத் தாக்கப்பட்டனர். அவலங்கள் அலைச்சல்கள் ஒவ்வொரு வீட்டு முற்றத்திலும் ஒவ்வொரு இராணுவ முகாம். ஒரே நேரத்தில் உலகின் 4வது மிகப்பெரிய இராணுவத்துடனும் சிறீலங்கா இராணுவத்துடனும் போர். ஆனாலும் இரண்டு வருட கால இடைவெளிக்குள் இந்தியப்படைகள் வந்த பாதைகளால் திரும்பி ஓடத் தொடங்கினர். இது தமிழீழ மக்களின் உறுதிக்கும் விடுதலை நேசிப்புக்குமான எடுத்துக் காட்டு இந்தியாவையே நம்பியிருந்த மக்களுக்கு இந்தியாவின் உண்மை நோக்கை அம்பலப்படுத்தி இந்தியாவை வெற்றி கொள்ள வைத்தது திலீபன் என்னும் மகத்தான போராளியின் அந்த அகிம்சை யாகம்தான்.
இன்றைக்கு தமிழீழத்தில் ‘திலீபன்” என்னும் சொல் ஒரு விடுதலைப் போராளியின் பெயராக மட்டும் இல்லாமல் ஆக்கிரமிப்புக் கெதிராக போர்க்குணாம்சத்தின் குறியீடாக நிற்கிறது.

-கஜன்-

இந்திய அமைதி காக்கும் படையின் பாரபட்சமான நடவடிக்கைகளையும் சிங்கள இராணுவத்திற்கு ஆதரவான நடவடிக்கைகளையும் கண்டித்து யாழ் கோட்டை முன்பாக நடந்த ஒரு நாள் அடையாள மறியற் போராட்டத்தில் லெப். கேணல் திலீபன் பேசிய பேச்சின் ஒரு பகுதி:

‘இந்த யாழ்ப்பாணக் கோட்டையிலே சில நூற்றாண்டுகளுக்கு முன் தமிழனின் கொடி பறந்தது. அந்தக் கொடியை போர்த்துக் கேயர் பறித்தெடுத்தனர். போர்த்துக்கேயரிடமிருந்து ஒல்லாந்தரும் ஒல்லாந்தரிடமிருந்து ஆங்கிலேயரும் கைப்பற்றிக் கொண்டனர். ஆங்கிலேயரிடமிருந்து சிங்களவர் கடைசியில் கைப்பற்றினர். இன்று இந்தியர் இந்தக் கோட்டையிலே மீண்டும் தமிழ்க்கொடி – அதாவது புலிக்கொடி பறக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை.
அந்தத் தமிழ்க்கொடியைப் பறக்க விடுவதற்காக ஒவ்வொருவரும் எமது உயிரை அர்ப்பணித்துக் கொண்டு வருகிறோம். அதில் என் பங்கு எப்போது…? என்பதுதான் எமது கேள்வியாக இருக்கவேண்டுமே தவிர பதவிகள் எமக்குப் பெரியதல்ல. பதவிகளைத் தேடிச் செல்பவர்கள் புலிகள் அல்ல: அதற்கு வேறு ஆட்கள் இங்கே இருக்கிறார்கள்!”

கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் செல்வத்தைக் கொன்ற பாரதம்!

திலீபனின் தியாகப்பயணம் ஆரம்பமாகிவிட்டது. அங்கு பக்கத்திலிருந்த மேடையில் பிரசாத் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. திரு. நடேசன் காசி ஆனந்தன் ஆகியோர் திலீபனின் உண்ணாவிரதம் எதற்காக ஆரம்பிக்கப்படுகிறது என்பது பற்றி விளக்கமளிததார்கள்… தமிழ் மக்களினதும் தமிழர் தாயகத்தினதும் உரிமைகளைப் பேணும் நோக்கமாக இந்திய அரசாங்கத்தினதும் இந்திய மக்களினதும் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட 5 கோரிக்கைகளும் பின்வருமாறு:
1. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் இன்னும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்படவேண்டும்.
2. புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களக் குடியேற்றம். உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.
3. இடைக்கால அரசு நிறுவப்படும் வரை ‘புனர்வாழ்வு” என்று அழைக்கப்படும் சகலவேலைகளும் நிறுத்தப்படவேண்டும்.
4. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்களில் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்
5. இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவல்படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு தமிழ்க்கிராமங்கள் பள்ளிக் கூடங்கள் ஆகியவற்றில் குடி கொண்டுள்ள இராணுவ பொலிஸ் நிலையங்கள் மூடப்பட வேண்டும்.

பிரசாத் அவர்களால் மேற்படி 5 கோரிக்கைகளும் வாசிக்கப்பட்டன. இதே கோரிக்கைகளை 13-9-87 அன்று இந்திய உயர் ஸ்தானிகரின் கையில் நேரடியாக கிடைக்கக் கூடியதாக அனுப்பி 24 மணித்தியால அவகாசமும் கொடுத்திருந்தார்கள்… ஆனால் 15-9-87 வரை எந்தப் பதிலும் தூதுவரிடமிருந்து கிடைக்காத காரணத்தினால் சாகும்வரை உண்ணாவிரதமும் மறியல் போராட்டமும் நடத்துவது என தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதேசப் பொறுப்பாளர்களின் கூட்டத்தில் 13-9-87 அன்று தீர்மானிக்கப்பட்டது.. அதன்படிதான் திலீபனின் தியாகப்பயணம் ஆரம்பித்தது.

நான்காம் நாள்:
தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியற்பிரிவு ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் திலீபனை வந்து சந்தித்தார். இந்திய அரசிடமிருந்தோ இந்தியத் தூதுவரிடமிருந்தோ இதுவரை எந்தப்பதிலுமே கிடைக்கவில்லை என்று அவர் திலீபனிடம் கூறினார்.
…அகிம்சை போராட்டத்துக்கு மதிப்பளிக்கும் இந்திய நாட்டின் சமாதானப் படையினரின் கண்களைத் திறப்பதற்கு இந்தச் சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்தது முற்றிலும் பொருத்தமானதே.. இந்தியா உளப்பூர்வமாக அண்ணல் காந்தியைப் பின்பற்றும் நாடாக இருந்தால். நிச்சயம் பதில் சொல்லியே ஆகவேண்டும்… இல்லையேல் உலகத்தின் பார்வையில் இருந்து அது தப்பவே முடியாது.
… இந்தியா என்ன செய்யப்போகிறது?
‘வெள்ளையனே வெளியேறு” என ஆங்கிலேயரை வெளியேற்றுவதற்காகப் போராட்டம் நடாத்திய காந்தி இன்று இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்? ஆனால் திலீபனோ இந்தியப் படையை வெளியேறு என்று கூடக் கேட்கவில்லையே! இவர்கள் திலீபனின் சாதாரண கோரிக்கைகளுக்கு ஏன்…. எதுவுமே புரியவில்லை?

ஐந்தாம் நாள்:

பத்திரிகைகளைப் படிக்கும் போது கைகளுடன் சேர்;ந்து உள்ளமும் நடுங்கியது…. திலீபன் என்ற ஓர் இனிய காவியத்தின் கடைசி அத்தியாயத்துக்கு வந்து விட்டோம் என்பது போன்ற பிரமை எனக்கு ஏற்பட்டது.
அதற்கிடையில் ஓர் செய்தி காற்றோடு காற்றாகக் கலந்து வந்து காதில் விழுகிறது. தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியற்பிரிவைச் சேர்ந்த திலகர் அவர்கள் இந்தியாவிற்குச் சென்றிருக்கிறார் என்பதுதான்…அது. புலிகளின் சார்பாக திம்புப் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டவர்களில் திலகரும் ஒருவர். அப்படியானால்… பிரதமர் ராஜீவ்காந்தியிடமிருந்து ஏதாவது அழைப்பு வந்திருக்குமா…?
‘எந்த விதமான அழைப்பும் வரவில்லை. வழக்கம் போல சாதாரண விசயங்களைக் கவனிக்கத்தான் திலகர் போயிருக்கிறார்…”
உலகில் மனித தர்மமே செத்துவிட்டதா? காந்தி இறந்ததற்காகக் கண்ணீர் வடிக்கும் இந்த உலகம் காந்தியத்தின் காலடியில் சிறிதுசிறிதாக எரிந்து கொண்டிருக்கும் திலீபன் என்ற மெழுகுவர்த்தியைக் காணவில்லையா? அல்லது கண்டும் காணாமல் போய்விட்டதா…?

மாலை இந்திய சமாதானப்படையினரின் யாழ். கோட்டை இராணுவ முகாம் பொறுப்பாளர் கேணல் பரார் அவர்கள் திலீபனைப் பார்க்க வந்தார். அவர் சனக் கூட்டத்தினுர்டே நடந்து வரும்போது பல தாய்மார் அவர்மீது கற்களை வீசத் தயாராகிக் கொண்டிருந்தபோது அவர்களைத் தடுத்து தகுந்த பாதுகாப்புக்கொடுத்து மேடைக்கு அருகே அழைத்துச் சென்றனர் விடுதலைப்புலிகள். திலீபனின் உடல் நிலை மோசமாகி வருவதால் பொதுமக்களும் இயக்க உறுப்பினர்களும் மிகுந்த உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கிறார்கள் என்பதை யோகியும் வேறு சிலரும் அவரிடம் எடுத்துக் கூறினர். தான் சென்று தகுந்த நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதிகூறிவிட்டுச் சென்றார். அவர் மூலமாவது திலீபனின் உயிர் காப்பாற்றப்படாதா என்ற நப்பாசையில் அன்று எம்மிற் சிலர் சற்று நிம்மதியாக இருந்தோம்.

ஆறாம் நாள்:
கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரகத்திலிருந்து ஓர் முக்கிய நபர் இன்றுவரப் போகிறாராம். அவர் நமது அரசியல் பிரிவினருடன் திலீபனைப் பற்றிப் பேசப் போகிறாராம்….
இந்தியத் தூதுவராலயத்திலிருந்து யாராவது வருவதானால் நிச்சயமாகப் பிரதமர் இராசீவ் காந்தியின் ஆலோசனைப்படிதான் வருவார்கள். அப்படி வருபவர்கள் உணர்ச்சி பொங்கும் தாய்க்குலத்தின் கண்ணீரைக் கண்டாவது இரங்கமாட்டார்களா?
திலீபனை எண்ணித் துடிதுடித்துக்கொண்டிருக்கும் விடுதலைப்புலிகளின் மனங்களுக்கு அந்த ஆறுதல் செய்தி நிச்சயம் சாந்தியளிக்கத்தான் செய்யும்.

ஏழாம் நாள்:

நேற்றைய பேச்சுவார்த்தையின் முடிவு என்னவாக இருக்கும்…?

‘இந்திய அமைதி காக்கும் படையின் மூத்த தளபதி ஒருவரும் பிரிகேடியர் ராகவன் எயர் கொமாண்டர் ஜெயக்குமார் கடற்படைத் தளபதி அபயசிங்கா ஆகியோரும் வந்து பேசியதாகவும் உதவித் தூதுவர் வரவில்லை என்றும் திலீபனின் பிரச்சனையில் அவர்கள் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கவில்லை என்றும் தெரிந்தது”

ஒன்பதாம் நாள்:

காலையில் இந்தியப்படையின் தென்பிராந்தியத் தளபதி லெப். ஜெனரல் திபேந்தர் சிங் அவர்கள் கெலிகொப்டர் மூலம் யாழ் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் வந்திறங்கி தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்தார். பின்னர் இருவரும் தனித்தனியாக வாகனங்களில் புறப்பட்டு யாழ். கோட்டை இராணுவ முகாமுக்குள் சென்றனர். ஒரு மணி நேரத்துக்கு மேலாக இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால்… கிடைத்தது ஏமாற்றம்தான்..!

திலீபனின் ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு பல தொண்டர் நிறுவனங்கள் இந்தியப் பிரதமர் திரு. ராசீவ் காந்திக்கு மகசர்களை இன்று அனுப்பி வைத்திருப்பதாகச் சில தமிழ்ப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

1. யாழ் பிரசைகள் குழுக்களின் இணைப்புக்குழு. (இந்தியத் தூதுவர் ஊடாக அனுப்பப்பட்டது)
2. வட பிராந்திய மினிபஸ் சேவைச்சங்கம். (பிரதி – தமிழக முதல்வருக்கும் அனுப்பப்பட்டது)
3. வட மாகாண பனம் பொருள் கூட்டுறவுச் சங்கங்களின் சமாம்.
4. தொண்டைமானாறு கிராம மட்ட கடற் தொழில் சமூக அபிவிருத்திச் சங்கம்.
5. வடபிராந்திய போக்குவரத்து ஊழியர் சங்கம் என்பன அவற்றில் சிலவாகும்.

மன்னாரிலுள்ள இந்திய அமைதிப்படை முகாமுக்கு முன் திலீபனுக்கு ஆதரவாக மகசர் ஒன்றைக் கொடுப்பதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு சென்றபோது ஆத்திரமடைந்த இந்திய அமைதி காக்கும் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது ஒருவர் அதில் இறந்துவிட்டதாகவும் 18 பேர் படுகாயம் அடைந்ததாகவும் எமது தகவல் தொடர்புச் சாதன செய்திகள் கூறுகின்றன.
மாலை இந்தியத் தூதுவர் டிக்சித்-தலைவர் பிரபாவை சந்திப்பதற்கு வந்திருந்தார். பிற்பகல் 1:30 மணியில் இருந்து பிற்பகல் 6:30 மணிவரை இரு குழுக்களும் அமைதியாக பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இந்தியத் தரப்பில் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டவர்கள்.

1. தூதுவர் திரு. யே. என். டிக்சித்
2. இந்தியப் படையின் தென் பிராந்தியத் தளபதி லெப். ஜெனரல் திபேந்தர் சிங்.
3. அமைதி காக்கும் படைத்தளபதி மேஜர் ஜெனரல் கர்க்கீத் சிங்.
4. பிரிகேடியர் பெர்னான்ட்சு
5. இந்தியத் தூதரகப் பாதுகாப்பு அதிகாரி கப்டன் குப்தா ஆகியோர்.

விடுதலைப்புலிகளின் தரப்பில்:
1. தலைவர் திரு. வே. பிரபாகரன்
2. பிரதித்தலைவர் திரு. கோ. மகேந்திரராசா
3. திரு. அன்ரன் பாலசிங்கம்
4. திரு. செ. கோடீசுவரன்
5. திரு. சிவானந்தசுந்தரம்
ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக செய்தி வந்ததும் மனம் துள்ளிக்குதித்தது. ஒன்பதாம் நாளான இன்று ஒரு நல்ல முடிவு எப்படியும் ஏற்படும் அந்த நல்ல முடிவு ஏற்பட்டதும்.. உடனடியாக திலீபனை யாழ் பெரியாசுப்பத்திரியில் அனுமதித்து அவசர சிகிச்சைப் பிரிவில் விசேட சிகிச்சைகள் அளித்தால் 24 மணித்தியாலங்களில் அவர் ஒரளவு பழைய நிலைக்குத் திரும்பிவிடுவார்….
……இரவு 7:30 மணிக்கு அந்தச் செய்தி என் காதில் விழுந்தபேது இந்தி உலகமே தலைகீழாக சுற்றத் தொடங்கியது… அந்தக் கற்பனைக் கோட்டை ஒரே நொடியில் தகர்ந்து தவிடுபொடியாகியது.

ஆம்! பேச்சுவார்த்தையின்போது இந்தியத் தூதுவரால் விதிமொழிகளைத்தான் தரமுடிந்தது….திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் ஒரு தொடர்கதையாகவே ஆகிவிட்டது. எழுத்தில் எந்தவித உறுதி மொழிகளையும் தர இந்தியத் தரப்பு விரும்பவில்லை என்பதை அவர்களின் நடத்தை உறுதி செய்தது… திலீபனின் மரணப் பயணம் உறுதியானது என்பதையும் அது உணர்த்தியது. நாம் முற்றுமுழுதாக நினைத்திருந்ததெல்லாம் இதுதான். இந்தியா ஒரு பழம்பெருமை மிக்க சனநாயக நாடு. காந்தி பிறந்த பொன்னான பூமி. அகிம்சையைப் பற்றியும் உண்ணாவிரதத்தைப் பற்றியும் உலகில் பெருமைப்படக் கூடிய அளவுக்கு காந்தி அடிகள் மூலம் புகழ் பெற்றநாடு. அப்படிப்பட்ட ஒரு நாட்டிடம் நீதி கேட்டு அகிம்சை வழியில் உண்;ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த திலீபன் உண்மையிலேயே பாக்கியசாலிதான்!
ஏனெனில் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த நாடு நிச்சயமாக திலீபனுக்கும் ஓர் நல்ல வழியைக் காட்டத்தான் செய்யும். அதன் மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகளை ஓரளவாவது இந்திய அரசு நிறைவேற்றத்தான் போகிறது. என்ற எண்ணத்தில்தான் கண்களை மூடிக்கொண்டு.. இந்தத் தியாக வேள்வியில் என்னால் முடிந்த பங்கைச் செலுத்துவதற்குத் தயாரானேன்… இவ்வளவு விரைவில் அவையெல்லாம் ‘மாயமான்” ஆகிவிடும் என்று நான் கனவுகூடக் கண்டிருக்கவில்லை.. எத்தனை பெரிய ஏமாற்றம்!” எத்தனைபெரிய தவிப்பு?
இன்றைய நிலையில் திலீபன் இருந்த நிலையைப் பார்க்கும்போது நம்பிக்கையே அற்றுவிட்டது. இனி ஒரு நல்ல தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதன் பிறகு திலீபனை ஆஸ்பத்திரியில் அனுமதித்தாலும் காப்பாற்ற முடியுமா என்பது என்னைப் பொறுத்தளவில் கேள்விக்குறிதான்.. அப்படியிருக்க… கடவுளே! மனித தர்மத்திற்குக் கிடைக்கப் போகும் பரிசு இதுதானா? திலீபனைக் கொல்வதற்கு அவர்கள் திடமனம் பூண்டுவிட்டனர் என்பது தெரிந்துவிட்டது.

பன்னிரண்டாம் நாள்:

தியாகப்பயணத்தில் 12 நாட்கள் அவரின் கூட இருந்து அவரின் போராட்டத்தில் பங்கு பற்றி வேதனையின் எல்லைக்கே சென்று வந்த எனக்கு இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு இன்னும் எத்தனை நாட்கள் தேவையோ நானறியன். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்! திலீபனின் உயிர் அநியாயமாகப் போகவில்லை. அதற்குப் பதிலாக அவர் ஒரு படிப்பினையை எமக்குக் கற்பித்துவிட்டுப் போயுள்ளார்… அகிம்சைப் போராட்டம் என்பது மனித நேயமும் உயர்பண்பும் மிக்கவர்களிடம்தான் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.. ஆயுதங்கள்தான் எமது தமிழீழப்போராட்டத்தைப் பொறுத்தவரை சரியான பதில் தரமுடியும் என்பதையும் திலீபன் மறைமுகமாக உணர்த்திவிட்டுப்போயிருக்கிறார்… அந்த தியாகதீபத்தின் லட்சியங்கள் நிறைவேற எம்மை நாம் அர்ப்பணிப்போம்!….

– மு. வே. யோ. வாஞ்சிநாதன் –

எங்கள் முற்றத்தில்
விடுதலைச்சிட்டென….

அகிம்சை என்னும் உயரிய ஒழுக்கத்தின்பால் இயங்குவதாக காட்டிக்கொண்டிருந்த இந்தியா தனது கோரமுகத்தைக் காட்டியது. நல்லூரில் 15.9.87 அன்று ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தான். ஒரு துளி நீர் கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் அந்த தியாக வேள்வியில் மெழுகாய் உருகினான். அவன் நேசித்த மக்கள் அலையலையாய் அவன் முன் திரண்டார்கள். அவன் மெல்ல மெல்ல உருகி அணைந்து கொண்டு போவதைக் கண்டு துடித்தார்கள். அந்த மக்களின் துடிப்பைக் கண்டு அவனால் பேச முடியாத நிலையிலும் பேசவேண்டும் என்கிற துடிப்போடு அவன் பேசுகையில் ‘நான் இறந்ததும் விண்ணிலிருந்து அங்கே உள்ள என் நண்பர்களுடன் சேர்ந்து தமிழீழம் மலரப்போகும் அந்த நாளை எதிர்பார்த்துக் கொண்டேயிருப்பேன்” என்று கூறினான். அத்தகைய நம்பிக்கையோடு பயணித்துவிட்ட அந்த வீரர்களின் நம்பிக்கை ஒருபொழுதும் தோற்றுவிடாது. பரிபூரண சுதந்திரத்தை எமது மக்கள் அடைந்தே தீருவார்கள். திலீபன் போன்றவர்கள் மிக அருமையானவர்களே.
‘ஒரு புனித இலட்சியம் நிறைவேறவேணும் எண்டதற்காகத்தான் எங்களை நாங்கள் வருத்திக்கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறோம்” எனத்திலீபன் நல்லூரில் உண்ணாவிரத மேடையில் அவனோடு கூட இருந்த கவிஞர் வாஞ்சிநாதன் நீர் அருந்தக் கேட்டபோது அவரிடம் இவ்வாறு கூறினான்.
எமது விடுதலைப்பயணம் அப்படிப்பட்டதுதான். எம்மை மிகக் கடுமையாக வருத்தித்தான் அந்த உயரிய விடுதலையை வென்றெடுக்கமுடியும். அதுவே பெறுமதி மிக்கதாயிருக்கும் என்பதை அவனது வாழ்க்கை எமக்கு உணர்த்துகிறது.
எந்த நேரமும் இயங்கிக்கொண்டிருக்கும் அவனது இயல்பு பாரதியார் கண்ட சிட்டுக்குருவியை எண்ணவைக்கும். அத்துணை துடிப்பு வேகத்துடன் விசையுறத்திரிந்தான். இந்த வேகமும் துடிப்பும் எம் ஒவ்வொருவரிலும் ஆளவேண்டும். அத்தகைய வீரனின் நினைவில் நனைவோம்.

வீரச்சாவுக்குமுன் தியாகி திலீபன்
ஆற்றிய இறுதி உரையிலிருந்து…

“என்னால் பேச முடியவில்லை ஆயினும் என் மனம் மகிழ்ச்சியில் மிதக்கின்றது. நீங்கள் பல்லாயிரக்கணக்கில் இந்தப் புரட்சிக்குத் தயார்பட்டுவிட்டதை என் கண்கள் பார்க்கின்றன. நான் திருப்தி அடைகிறேன். இன்று பேச முடியாத நிலை இருக்குமென நினைத்தேன். ஆனால் நீங்கள் தந்த உற்சாகம்தான் என்னை இப்போதும் வாழவைத்துக் கொண்டுள்ளது.
…… நான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற ஒவ்வோர் மக்களும் இந்தப் பெரும் புரட்சிக்குத் தயாராக வேண்டும். நான் நேற்றும் கூறிவிட்டேன் எனது இறுதி ஆசை இதுதான்.
நான் மீட்கப்பட முடியாத நிலைக்குச் சென்றுவிட்டதை உணர்கிறேன். ஆனால் வெகு பெரும்பணியை உங்களிடம் விட்டுச் செல்கிறேன். நான் மிகவும் நேசித்த என் தோழர்கள் என் சகோதரிகள் எல்லாவற்றிலும் மேலாக என் தலைவன் திரு. பிரபாகரன் அவர்கள் உங்களுடன் இருக்கிறார். நீங்கள் பரிபூரணமாகக் கிளர்ந்தெழவேண்டும். மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! இப் புரட்சி நாள் என்னுயிருக்கு மேலாக நேசிக்கும் என் மக்களுக்குக் கிடைக்கட்டும். எமது எதிர்கால சந்ததி வாழ ஒரு நாடு தேவை. அல்லாவிட்டால் நாளை எங்களைப் போல்தான் எமது எதிர்கால சந்ததியும் துன்பப்படும் வருத்தப்படும்.
…எனது மூளை இப்போது எதனையும் நன்றாக கிரகிக்கவில்லை என்பது எனக்கு விளங்குகிறது. இதில் பிழைகள் இருக்கலாம். இதை நீங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள். நன்றி!”

-தியாகி திலீபன்-

‘தியாகி திலீபன் ஒரு இலட்சிய நெருப்பு”
தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு. வே. பிரபாகரன்-

“எமது விடுதலை இயக்கம் எத்தனையோ அற்புதமான தியாகங்களைப் புரிந்திருக்கிறது. வீரகாவியங்களைப் படைத்திருக்கிறது. அர்ப்பணிப்புக்களைச் செய்திருக்கிறது. இவை எல்லாம் எமது ஆயுதப் போராட்ட வரலாற்றில் நாம் ஈட்டிய வீரசாதனைகள் ஆனால் எனது அன்பான தோழன் திலீபனின் தியாகமோ வித்தியாசமானது. வியக்கத்தக்கது. எமது போராட்ட வரலாற்றில் புதுமையானது. சாத்வீகப் போராட்டக்களத்தில் தன்னைப் பலிகொடுத்து ஈடுஇணையற்ற ஒரு மகத்தான தியாகத்தைத் திலீபன் புரிந்தான். அவனது மரணம் ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்ச்சிக. தமிழீழப் போராட்ட வரலாற்றில் ஒரு புரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி. தமிழீழத் தேசிய ஆன்மாவைத் தட்டி எழுப்பிய நிகழ்ச்சி. பாரத நாட்டைத் தலைகுனியவைத்த நிகழ்ச்சி. உலகத்தின் மனச்சாட்சியை சீண்டிவிட்ட நிகழ்ச்சி.
திலீபன் யாருக்காக இறந்தான்? எதற்காக இறந்தான்? அவனது இறப்பின் அர்த்தமென்ன? அவனது இறப்பு ஏன் ஒரு மகத்தான நிகழ்ச்சியாக மக்கள் எல்லோரையுமே எழுச்சி கொள்ளச் செய்த ஒரு புரட்சிகர நிகழ்ச்சியாக அமைந்ததுஃ
திலீபன் உங்களுக்காக இறந்தான். உங்கள் உரிமைக்காக இறந்தான். உங்கள் மண்ணுக்காக இறந்தான். உங்கள் பாதுகாப்பிற்காக உங்கள் சுதந்திரத்துக்காக உங்கள் கௌரவத்திற்காக இறந்தான்.
தான் நேசித்த மக்களுக்காக தான் நேசித்த மண்ணுக்hக ஒருவன் எத்தகைய உயர்ந்த உன்னத தியாகத்தைச் செய்ய முடியுமோ அந்த அற்புதமான அர்ப்பணிப்பைத்தான் அவன் செய்திருக்கிறான்.
ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன். ஆனால் உயிரிலும் உன்னத மானது எமது உரிமை. எமது கௌரவம்.
நான் திலீபனை ஆழமாக நேசித்தேன். உறுதிவாய்ந்த ஒரு இலட்சியப் போராளி என்ற ரீதியில் அவன் மீது அளவு கடந்த பாசம் எனக்குண்டு. அவன் துடிதுடித்துச் செத்துக்கொண்டிருக்கும் பொழுதெல்லாம் என் ஆன்மா கலங்கும். ஆனால் நான் திலீபனை ஒரு சாதாரண மனிதப்பிறவியாகப் பார்க்கவில்லை. தன்னை எரித்துக்கொண்டிருக்கும் ஒரு இலட்சிய நெருப்பாகவே நான் அவனைக் கண்டேன். அதில் நான் பெருமை கொண்டேன். இலட்சிய உறுதியின் உச்சக் கட்டமாக திலீபன் தன்னை அழித்துக்கொண்டான். அவன் உண்மையில் சாகவில்லை. காலத்தால் சாகாத வரலாற்றுப் புருசனாக அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
திலீபனின் மரணம் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை தெரிவித்திருக்கிறது. இது அர்த்தமற்ற சாவு என இந்தியத் தூதர் சொல்லியிருக்கிறார். ஆனால் உண்மையில் நடந்தது என்ன? நடந்து கொண்டிருப்பது என்ன? என்பதை மக்கள் அறிந்து கொள்ளவேண்டும்.
எமது உரிமைகளை; வழங்கப்படும். எமது மக்களுக்கும் எமது மண்ணுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும். தமிழ் மக்கள் தமது பாரம்பரிய தாயகப் பூமியில் தம்மைத்தாமே ஆளும் வாய்ப்பு அளிக்கப்படும். இப்படியெல்லாம் பாரத அரசு எமக்கு அளித்த வாக்குறுதிகளை நம்பி நாம் எமது ஆயுதங்களைக் கையளித்தோம். எமது மக்களினதும் மண்ணினதும் பாதுகாப்பை இந்தியாவுக்குப் பொறுப்பளித்தோம்.
அதனையடுத்து என்ன நடைபெற்றது என்பதெல்லாம் எமது மக்களாகிய உங்களுக்குத் தெரியும்.
தமிழ் அகதிகள் தமது சொந்தக் கிராமங்களுக்குச் செல்ல முடியாது முகாங்களுக்குள் முடங்கிக் கிடக்க சிங்களக் குடியேற்றம் துரிதகதியில் தமிழ் மண்ணைக் கபளீகரம் செய்தது. சிங்கள அரசின் பொலிஸ் நிர்வாகம் தமிழ்ப்பகுதிகளில் விஸ்தரிக்கப்பட்டது.

அவசரஅவசரமாக சிங்கள இனவாத அரசயந்திரம் தமிழ்ப்பகுதிகளில் ஊடுருவியது. சமாதான ஒப்பந்தம் என்ற போர்வையில் சமாதானப்படையின் அனுசரணையுடன் சிங்கள அரச ஆதிக்கம் தமிழீழத்தில் நிலைகொள்ள முயன்றது.
இந்த பேராபத்தை உணர்ந்து கொண்ட திலீபன் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி காணத் திட சங்கற்பம் கொண்டான்.
சிங்கள அரசுடன் உரிமை கோரிப் போராடுவதில் அர்த்தமில்லை. பாரதம்தான் எமது இனப்பிரச்சனையில் தலையிட்டது. பாரதம்தான் எமது மக்களின் உரிமைக்கு உத்தரவாதமளித்தது. பாரதம் தான் எம்மிடம் ஆயுதங்களை வாங்கியது. பாரதம்தான் எமது ஆயுதப்போராட்டத்தை நிறுத்திவைத்தது. ஆகவே பாரத அரசிடந்தான் நாம் உரிமை கோரிப் போரிட வேண்டும். எனவேதான் பாரதத்துடன் தர்மயுத்தம் ஒன்றைத் தொடுத்தான் திலீபன். அத்தோடு பாரதத்தின் ஆன்மிக மரபில் பெறப்பட்ட அகிம்சை வடிவத்தை ஆயுதமாக எடுத்துக்கொண்டான்.
மக்களின் ஒன்று திரண்ட சக்தி மூலமே மக்களின் ஒருமுகப்பட்ட எழுச்சி மூலமே நாம் எமது உரிமைகளை வென்றெடுக்கலாம். திலீபனின் ஈடுஇணையற்ற தியாகத்திற்கு நாம் யெ;யும் பங்களிப்பு இதுதான்.

Source: www.naatham.net