வாடிய மலர்கள்

என் ஊரவர்
என்றும் மனதில்
நினைவில் நிற்பவர்கள்
பருவ வயதில்
உயிரை தொலைத்தவர்
பள்ளி செல்லும் வயதில்
கொள்ளி கொண்டவர்

திலீபன் அண்ணா
கஜேந்திரன் (ரொட்டி)
சுரேந்திரன்(முட்டி)
ரஜுதரன்
குமரசீலன்
ரவி அண்ணா
மதன் அண்ணா
பாபு அண்ணா
தாஸ்
புருசோத்தமன்
வசந்தி அக்கா
கிருபா
ராசகுமாரன்
தாசன் அண்ணா…..

இன்னும் பல
பெயரறியா
முகம் தெரியா
கார்த்திகை
மலர்கள் நினைவாக….

வீரமோடு போராடி
விருச்சமாக முன்பே
வேரோடு கழுவறுக்கபட்டு
விழுதுகளாக
விதைகளாகப்பட்ட
மறவர்களே!

உலகத்தின் நாடியை
மாற்றத்தை
புரிந்து கொள்ளாததன்
விளைவை
பேரவலத்தோடு
சந்தித்த
என் இனமே!

நந்திகடலிலே
நாதியற்று
நலிவுற்று
சோர்வுற்று
மணற்தரையிலே
கேட்பாறற்று
மரணத்தை
தழுவியயென்
மண்ணின்
மைந்தர்களே!

துரோகிகள் முகமூடிகள்
கிழிக்கும் நேரமல்ல இது
பிழையெங்கே, சரியெங்கே
பார்க்கும் தருணமுமல்ல
இது.

வாடிய மலர்களை
வருடி கொடுக்கும் தருணம்
வதங்கிய உடல்களை
மனதில்  நினைக்கும்
தருணம்

வரி புலியாகட்டும்
புரட்சி படைகளாகட்டும்
மக்கள் இயக்கங்களாகட்டும்
முகமூடி போர்த்திய
தலையாட்டிகளாகட்டும்
அகிம்சை கூட்டணி
அமைப்புகளின்
தலைமைகளாகட்டும்
மிச்சம் எஞ்சிய
தமிழர் தேசியமாகட்டும்

கனவொன்றை
நனவாக்க
களமாடச்சென்றோரே
கடத்தி செல்லபட்டு
காணாமல் போனோரே
துரோகி பட்டம் பெற்று
நியாயம் மறுக்கப்பட்டு
மின்கம்பியில்
நெற்றிப்பொட்டோட
வாழ்வை முடித்தவரே

அனைவரையும்
கார்த்திகை நாளில்
நினைவில் நிறுத்தி
நாளைய உலகமயமாக்கல்
நோக்கி நகர்வோம்

 

ஊரெழு

காளை மாடு வண்டி கட்டி
  காலையில
  மூக்கணாங்கயிறு பிடித்து
  ஊரெல்லாம் சலங்கை ஒலிக்க
  சந்தைக்கு போன ஊர்
  என் ஊரு!

கொம்பு சீவி, வர்ணம் பூசி
 சந்தனும், குங்குமமும்  கலந்து
 நெற்றியிலே பொட்டும் இட்டு
 முதுகிலே உன் பெயரை சுட்டு
 பூ மாலையிட்டு -உன்
 அழகு பார்த்த ஊர்
 என் ஊரு!


 பொங்கல் நாளில்
 நேரம் பார்த்து
 கலப்பை பூட்டி
 கனவு கொட்டி
 நாத்து நட்டு
 பொங்கலிட்டு
 விளக்கேற்றி
 உழுது வாழ்ந்த ஊர்
 என் ஊரு!

சோடி எருது இரண்டு கட்டி
 ஊரறியாது வண்டி பூட்டி
 காதலியை தூக்கி வந்து
 தாலி கட்டி
 ஊரெல்லாம் பவனி வந்த
 வீரன் - என் பாட்டன் , பாட்டி
 பிறந்த ஊர்
 என் ஊரு!

ஊரெழு.