மாமியின் நினைவாக….

வடமராட்சி அல்வாய் 
தத்தெடுத்த இளைய மருமகள்
சின்னமாமாவின் முழுமதி
வெண்ணிலாவின் தாலாட்டு
பிறந்த ஊரை விட்டு, புகுந்த ஊருடனும்
உறவுகளுடனும், பழக்க வழக்கங்களுடன்
ஒன்றாகி போன ஊரெழுவின் ஒளி விளக்கு
என் அன்பு சின்ன மாமி
இனி எம்முடன் இல்லை. மாமியின் உருவம் எம்முடன் இல்லாதபோதும், அவருடனான நினைவுகள், எப்போதும் எம்முடன் வாழ்ந்து கொண்டு இருக்கும்.
அந்த நினைவு துளிகளில் சிலதை அவரின் நினைவாக இங்கே பகிர்கிறேன்.

எனக்கு ஒரு ஆறு வயது இருக்கும் போது மாமி என்னை துணைக்காக அல்வாய் குமிழமுனை பிள்ளையார் கோவில் அன்னதானத்துக்கு கூட்டி சென்றது சாதுவாக நினைவில் உள்ளது. அன்று பின்னேரம், ஒரு குட்டித்தூக்கத்துக்கு பிறகு வீட்டை அம்மாவிடம் போகப் போறன் எண்டு அழுது மாமியிடம் அடம் பிடித்ததில் இருந்து மாமியின் நினைவு பதிவுகள் ஆரம்பிக்கிறது.

மாமி வீட்டில எப்பவும் சுறு சுறுப்பாக இருப்பா. ஒரு நாள் கூட , வீட்டில பகல் நித்திரை கொண்டு பார்த்திருக்க முடியாது. எப்பவும் , ஏதோ பர பர எண்டு வேலை செய்து கொண்டு பம்பரமாக இருப்பா. குசினிகுள் வேலை செய்து கொண்டு, அந்த ஜன்னல் கம்பிகளின் ஊடாக வார ஆட்களிடம் ஊர் புதினங்கள் அளவளாடிய படியே மும்மரமா முழு வேலைகளையும் செய்து முடிப்பா.

வீட்டை மாமி அலங்காரம் செய்வது  மாமிக்கு கைவந்த கலை. ஒரு மர showcase  முழுவதும் அழகாக , நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் அழகு பொருட்கள். அதன் மேலே வரிசையாக அழகாக குடும்ப படங்கள். கடைசியாக கனடாவில் இருந்து போக முன், தரணியின் middle school graduation படம்  ஒண்டு கேட்டு வேண்டியிருந்தா. காலத்துக்கு காலம் தளபாடங்களை இடம் மாற்றி வைத்தும் அழகு பார்ப்பார்.

பூ மரங்கள் வளர்ப்பதிலும் மாமிக்கு கொள்ளை பிரியம். வீட்டின் முன்புறம் இரு பக்கமும் பூமரம் நடவென வீட்டு அடிவாரத்துடன் தொட்டிகள் கட்டப்பட்டு அங்கே பூங்கன்றுகள் அழகாக நடப்பட்டு இருக்கும்.  வீடு முழுவதும் பூஞ்சோலையாக விதம்,  விதமாக பூங்கன்றுகளுடன் எப்பவும் அழகாக வைத்திருப்பார். எத்தனை இடப்பெயர்வுகள் வந்த போதும், அவை அழிந்த போதும் மீண்டும் உருவாக்கி அழகாக வைத்திருப்பா.

கணக்கு வழக்கு, தோட்ட வேலையாட்கள் சம்பளம், சாப்பாடு , சந்தைப்படுத்தல், தயார்படுத்தல் என்று எல்லா வேலைகளையும் மாமாவுக்கு நோகாமல் தானே விரும்பி செய்வார்.  மாமா வெளியில் போகும் போது என்ன சேட் போடுவது முதல் அவர் சட்டை பொக்கட்டில் செலவுக்கு காசு வைப்பது வரை, அவருடைய அன்றாட நடவடிக்கைகளை, செய்ய வேண்டிய கருமங்களை பட்டியல் படுத்தி, அவரை ஒரு குழந்தை போல பார்த்து கொண்டார்.

அழகாக, நேர்த்தியாக உடை அணிவது மாமியின் கைவண்ணம். மாமி சேலை கட்டி வந்தால் அப்படி ஒரு அழகாக இருப்பார். கொண்டை போட்டு கொண்டு வெளிக்கிட்டு வந்தால் , ஒரு பாடசாலை ஆசிரியை மாதிரியோ அல்ல ஒரு அரச அதிகாரி மாதிரியோ இருப்பார். நான் சில வேளைகளில் வெண்ணிலாவிடம் பகிடியாக , அம்மாவிடம் எப்படி சேலை அழகாக கட்டுவது எண்டு கேட்டு பழக சொல்வேன்.


மாமியிடம் நெருங்கி பழகும் வாய்ப்பு எனது திருமணத்துடன் அதிகமானது. 2001 இல் சண்டை மும்மரமாக இருந்த தருணத்தில் எமது திருமணம் ஊரில் இடம்பெற்றது. தரை பாதைகள் அற்ற தருணத்தில், முகமாலையில் சண்டை உக்கிரமாக நடந்த நேரந்தில் பாலாலியின் ஊடாக யாழ் சென்றேன், வந்து இறங்கி அடுத்த நாளே பொன்னுருக்கல் நடந்தது. கலியாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கு. இரண்டாவது நாள் வெண்ணிலாவை பார்க்கும் ஆர்வத்தில் மாமி வீட்டை போனேன். குசினிக்குள் இருந்த மாமி gate வரை   ஓடி வந்து, என்ன வீட்டை வந்திட்டீர்கள், பொன் உருக்கினால் வீட்டை வர கூடாது, ஊர் உலகம் என்ன கதைக்கும் என்று பதறியது இன்னும் என் கண் முன்னே நிழலாக உள்ளது.

2003 இல் தரணியுடன் யாழ்ப்பாணம் சென்ற போது, ஆலங்காய் புட்டு, தீயல், பால் அப்பம் என்று ஒரே ஆரவாரமாக இருந்தார். மரக்கரி சமைக்கும் வீட்டில எனக்கு பிடிக்கும் என்று மீனும், மச்சமும் சமைத்து தந்ததை எப்படி மறவேன். அந்த முறை, கரன், மாமியுடன்  நுவரேலியா செல்லும் வாய்ப்பு கிட்டியது. மாமி குளிரில காதை கட்டி கொண்டு நின்றதும், பழைய மலையக நினைவுகளை பகிர்ந்து கொண்டதும் இன்னும் பசுமையான நினைவாக உள்ளது.

மூன்று தடவைகள் மாமி கனடா வந்து இருந்தார். தரணியின் சாமத்திய வீட்டுக்கு தனிய வந்திருந்தார். வரும் வழியில் transit இல் flight தவறி விட்டார். நாங்கள் பயப்பட போறமெண்டு, யாரோ ஒருவரிடம் தொலைபேசி இலக்கம் கொடுத்து, விடயத்தை தெளிவாக எங்களுக்கு அனுப்பி இருந்தார்.  எப்படி மாமி கதைத்தனீர்கள் எண்டால், ஏதோ எனக்கு தெரிந்த English இல் தான் எண்டு சிரித்தபடி கூறினார்.  

இங்கு Ottawa கோவிலில், வருவோர் எல்லோருடனும் கதைத்து அவர்களின் ஊர்,  சொந்தம், உறவினர் எல்லாம் அறிந்து எங்களுக்கு சொல்லுவா. யாரிடமும் அன்பாகவும், பண்பாகவும், நட்பாகவும், கள்ளம் கபடம் இன்றி  தூய்மையாகவும் நெருங்கி பழகுவா.

நாங்கள் விடிய எழும்பி, பரபரப்பாக வேலைக்கு செல்ல, பிள்ளைகள் பாடாசாலை செல்ல, எங்கள் படுக்க அறை தொடங்கி, பிள்ளைகளின் படுக்கை அறை வரை, போர்வைகளை பக்குவமாக மடித்து , அழகு படுத்தி துப்பரவாக வைத்திருப்பார். ஒரு நிமிடமும் வீணாக்காமல், ஏதோ தன்னால் முடிந்த வேலைகளை செய்து வெண்ணிலாவுக்கு பெரிதும் மனதளவில் ஆதரவாக இருந்தார்.

பூக்களை ஆய்ந்து பித்தளை செம்பு தட்டில் தண்ணீருக்குள் போட்டு வாசலில் வைத்து அழகு படுத்துவார்.

சில சமயங்களில் பிள்ளைகளை பார்க்க நான் மதிய இடைவேளைகளில்  வீட்ட வருவன். அந்த வெயில் காலங்களில், தயிரில் இருந்து மோர் தயாரித்து, வெங்காயம், மிளகாய், ஊறுகாயுடன் கலந்து தருவார். அது அமிர்தம் மாதிரி இருக்கும். அதற்காகவே சில நாட்களில், வேலை பழுவிலும் மதிய வேளை நான் வீட்டை வருவதுண்டு.

போன வருடம், கடைசியாக கனடா வந்த போது, பால் அப்பம் செய்து குட்டி, பிரகாஷ்குடும்பம், வெண்ணிலாவின் நண்பிகள் அனைவருக்கும் பரிமாறினா. இங்கு இருக்கும் போது ஆரோக்கியமாகவும் இருந்தார். அவருக்கு இங்கு இருப்பது மிகவும் பிடித்து இருந்தது. தாங்கள் அங்க தனிய தானே, இங்க சின்ன பிள்ளைகளுடன் இருப்பது எவ்வளவு சந்தோசமாக இருக்கு, எண்டு திரும்ப திரும்ப சொல்லுவார். இங்கு இருந்து ஊருக்கு திரும்பும் போது airport இல் வைத்து, பிள்ளைகளும், மாமியும் கண்ணீர் விட்டு அழுதது, இனி அம்மம்மாவை பார்க்க முடியாது என்று அவர்களுக்கு முதலே ஏதோ புரிந்து நடந்தது போல் உள்ளது.

வீட்டில் எல்லோரும் கூடிக்கதைக்கும் போது நான் எப்போதும் மாமியின் கருத்துக்குஆதரவாகவே கதைப்பேன். அதில் அவவுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியில் நானும் மகிழ்ந்திருப்பேன். “அவர் வந்திட்டார் போய் அவரை கவனி” என்று வெண்ணிலாவிடம் கடிந்து கொள்வதில் ஆகட்டும் , “நீங்கள் என்ன பாருங்கோ, சொல்லுறீங்கள்?” என்று தன் கருத்துக்களை மாமிக்கே உரித்தான பாணியில்  தெரிவிப்பதில் ஆகட்டும் அவரின் அன்பும், அரவணைப்பும் கிடைத்தது நான் செய்த பாக்கியம். அதே மாதிரி, எங்களது பிள்ளைகளும், மாமியிடம் கடந்த சில வருடங்களாக ஒன்றாக இருக்க முடிந்தது, மாமியுடன் கூட இருந்தது அவர்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியம்.

மாமி இல்லாத ஊரெழு வீட்டை என்னால் கற்பனை செய்தும் பார்க்க முடியவில்லை. எனது மனதளவில் மாமி இன்னும் ஊரெழு வீட்டில் இருக்கிறார், அடுத்த முறை போகும்போது ஓடி வந்து வாங்கோ வாங்கோ என்று வரவேற்பார் என்ற எண்ணத்துடனே வாழ்ந்து விட தோன்றுகிறது.

உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு….

ஆதவன்..