​Operation ரத்தினேஷ்வரி மாமி

​Operation ரத்தினேஷ்வரி மாமி

இது அம்மா நேற்று ஊரில் இருந்து வந்த போது கொண்டு வந்த மாங்காய். ஊரெழுவில் எங்கள் வீட்டு முற்றத்தில் காய்த்த காய் என்று அம்மா summer க்கு ஊருக்கு போய் வரும் போது ஆய்ந்து கொண்டு வந்தா.

என்ற சின்னன், இளவஞ்சிக்கு மாம்பழம் என்றால் அப்படி ஒரு விருப்பம். 

அப்பம்மா ஊரில் இருந்து வரேக்க எனக்கு மாம்பழம் கொண்டு வாங்கோ எண்டு சொல்லி இருக்கிறாள்.

அம்மாவும் முத்தின  காயா ஆய்ந்து கொண்டு வந்து ” டேய், இதை பழுக்க வைத்து அவளுக்கு கொடு” எண்டு நாலு காய் தந்தா.

பழைய நினைவுகள் இரை மீள , பழுக்க முதல் இண்டைக்கு இதை வெட்டி சாப்பிட்ட போது, முன்பு சிறு வயதில் மதில் பாய்ந்து,  ஆய்ந்து,  குத்தி சாப்பிட்ட பழைய நினைவுகள் வந்து போனது.

அம்மாவுக்கு தெரியாமல் , நானும், தம்பியும், இன்னும் சில அயல் வீட்டு நண்பர்களும் சின்னவயதில் செய்த  தாக்குதல்

“ஒபெரேசன் ரத்தினேஷ்வரி மாமி”

எங்கள் வீட்டு அயல் வீடு ரத்தினேஷ்வரி மாமி வீடு, சுற்று மதிலோட நிறைய மரங்கள். எங்கள் வீட்டு பக்கமாக செம்பாட்டான் மாமரம் கவனிப்பாரற்று காய்த்து தொங்கும். அணில் தின்னுவது அரைவாசி, மிஞ்சம் அப்படியே தகர கொட்டில் கூரை மேல ” டமால் டமால்” எண்டு விழும்.

அதை பார்க்க, பார்க்க எப்படா இதை ஆய்ந்து தின்னலாம் எண்டு எனக்கும், தம்பிக்கும் எண்ணம் ஓடும்.

கன நாள் ரெக்கி  எடுத்து ஒரு Sketch போட்டம்.

அம்மா மத்தியானம் சாப்பிட்டவுடன் ஒரு குட்டி தூக்கம் போடுவா. அந்த நேரம் தான் attack time, தாக்குதல் நேரம்.

தம்பியும் நானும் கண்களால் கதைத்து அம்மாவின் நித்திரையை உறுதி செய்தோம்.

பூனை மாதிரி குசினிக்க போய் ஒரு paper இல உப்பு கட்டி , இன்னுமொரு paper இல மிள்காய் தூள் சுத்தி எடுத்து வர வேணும்.  எடுத்தது தெரியாம அப்படியே திருப்பி வைக்க வேணும்,

அம்மாவிடம் மாட்டினா மானம், மரியாதை , என்ன பழக்கம், அது, இது எண்டு sentimental கதைத்து எங்களை நாங்களே குற்றவாளிகள் என்று மனிசி feel பண்ண வைத்திடும்.

எங்கள் வீட்டு மரம் ஒன்றில் ஏறி,  மாமி வீட்டை நோட்டம் போட்டன். அவையும் மத்தியானம் குட்டி தூக்கம்போல, ஆள் நடமாட்டம் இல்ல. செம்பாட்டான் மாமரம் அந்த பாரத்திலும் சோழ காற்றில  அங்கையும், இங்கையும் ஆடி வா வா எண்டு கூப்பிட்டது.

ஆனா ஒரு பிரச்சனை

மாமி  வீட்டை இரண்டு அல்சேசன் நாய்கள் இருக்கு, கட்டி இருகேக்கையே அதுகள் குரைக்கிற சத்தம் கேட்டாலே எங்களுக்கு மூத்திரம் போகும். எங்கட Plan படி, நான் அவர்களின் வளவில், நிலத்தில கால் வைக்க மாட்டன். மதிலில் இருந்து தகர கூரை, after the attack,  தகர கூரையிலிருந்து மதில். நாய்களிடம் மாட்டுப்படாம போட்ட திட்டம்.

எங்கட நல்ல காலத்துக்கு  அண்டைக்கு அதுகளும் முன் பக்கம் ஏதோ busy போல, பின் பக்கம் ஒரு ஈயாட்டம் இல்லை.

தம்பிக்கும், பக்கத்து வீட்டு சங்கருக்கும் சிக்னல் போட்டன்

Route Clear, Operation ON.

கஸ்டபட்டு மதில் மேல எறி , அதிலிருந்து ஒரு இரண்டு அடி தள்ளியிருந்த தகர கொட்டில கூரை மேல பாய்ந்தன்.

கீழ நீண்ட தம்பியின் கண்களில் ஒரு ஆச்சிரியம், எப்படி அண்ணா இப்படி தாவினான் எண்டு, பெருமையாக அவனை பார்த்தன், பார்வையில நான் பெரியவன் இதெல்லாம் சின்ன விசயம் எண்டதை புரிய வைத்தன். பின்னால ஏதாவது போட்டியாக கதைத்தான் என்றால் இதெல்லாம் உதவும்.

கை போன போக்கில் நாலு காயை பிடிங்கி எங்கள் வீட்டு பக்கமாக எறிந்து போட்டு, மாங்காய் ஆய்ந்த போது கையில சீறின மாங்காய் பாலை கால்சட்டையில் துடைத்து கொண்டு திரும்ப கூரையின் விளிம்புக்கு ஓடி வரவும் , தகர சத்தத்தை கேட்டு, முன்னுக்கு நின்ற நாய்கள் பின்னுக்கு ஓடி வரவும், நெஞ்சு அப்படியே திக் திக் எண்டு அடித்தது. மதிலில் இருந்து கூரைக்கு பாயேக்க இருந்த சுகம், கூரையில் இருந்து மதிலுக்கு பாயேக்க இல்ல. கொஞ்சம் இலக்கு தப்பு பாய்ந்தால், அவை வளவுக்க விழுந்து விடுவன். சிந்திக்க நேரம் இல்லை, நாய்கள் கிட்ட வருகினம். 

கண்ணை இறுக்கி மூடி கொண்டு ஒரு தாவல் தாவினேன். ஊரழு பிள்ளையார் புண்ணியம், correct landing on the மதில்.
நாலு கால் பாய்ச்சலில்,ஓடி வந்த நாய்கள், நான் எங்கள் வீட்டு பக்கம் குதிக்க முதல் , அதுகள் மதிலால பாய்ந்திடும் போல ஓடி வந்து மதிலோட sudden break போட்டு தங்கள் தோல்வியை மறைத்து குரைக்க தொடங்கின.
இங்க  தம்பியும், பக்கத்து வீட்டு சங்கரின் கண்களில் அண்ணா ஒரு வீராதி வீரனாக தெரிந்தான். நானும் ஒண்டுக்கும் பயப்படாத ஆள் மாதிரியும், இதெல்லாம் சின்ன விசயம் மாதிரியும் அவன்களுக்கு ஒரு படம் போட்டன் 

எங்கள் பக்கம் பிடிங்கி, எறிந்த மாங்காயை பொறுக்கி கொண்டு பின் வாழைத்தோட்டத்துக்க ஓடினம். அங்க மறைவாக ஒரு இடம் பிடித்து மாங்காயை  கல்லில குத்தி அதில் வந்த முதல் பெரிய துண்டை (எனக்கு) எடுத்து , ஓடேக்க சிந்தி சிதறி மிஞ்சி இருந்த உப்பிலயும், மிளகாய் தூளிலும் நேற்று இறைத்த வாழைத்தோட்ட பாத்தியில் ஒழிந்திருந்து சாப்பிட்ட thrill, taste இண்டைக்கு வரல்ல.
Note: Next day, ரத்தினேஷ்வரி மாமி அம்மாவிடம் 10 மாங்காயை கொடுத்து, “ஆதவன்நேற்று மதில பாய்ந்தவன், காலை, கைய உடைக்கப்போறான், இதை பிள்ளைகளிட்ட கொடுங்கோ “

எண்டு சொன்னதும், எங்கட ரகசிய operation, எப்படி இவக்கு leak ஆனது எண்டு நானும், தம்பியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தோம். இன்று வரை மாமிக்கு எப்படி தெரியுமெண்டு எங்களுக்கு தெரியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *