அதிகாலையில் ஆலடி Tution நோக்கி…

அதிகாலை கும்மிருட்டில் மார்கழி மாத குளிர் காற்று, வீட்டுக்குள் போர்வைக்குள் ஒழிந்து, சுருண்டு படுத்திருந்த போதும் ஊசியாக குத்தியது.

பிள்ளையார் கோவில் திருவெம்பாவை பூசை காண்டா மணி வேறு டாண்…டாண் என்று அடித்து காதோரம் இது கனவோ, நினைவோ என்று தெரியாத மாதிரி தாலாட்டு பாடியது.

பூச்சிகளின் ரீங்காரமும்
பறவைகளின் விடியலுக்கான தேடலும், காதோரம் தேனாக ஒலித்தது. வைரவருக்கு நேந்து விட்ட  சேவல் பொழுது விடிவதை செட்டையை அடித்து கொக்கரக்கோ கொக்கரக்கோ  என்று கூவி ஊரை எழுப்பியது. தூரத்தே காகம் ஒன்று இனி எப்ப புரட்டாதி சனி விரதம் வரும், என்னை அதுவரை தேடுவார் யாருமில்லையா?என்று ஊரெல்லாம் கேட்டு கரைந்தது.

கூடவே அம்மாவின் குரலும் ஒலித்தது.
“அப்பன் விடிய math class இருக்கு எழும்பன்” என்று.
திடுக்கிட்டு எழும்பி நேரம் பார்த்த போது பெரிய முள்ளு ஒன்பதுக்கு கிட்ட  வந்து அவசரத்தை உணர்த்தியது.

இன்னும் 15 நிமிடத்தில்  Math Class என்று பர பரக்க, அரிக்கன் விளக்கை தூண்டி ஒளியை கூட்டி, கிணற்றடிக்கு ஓடினேன்.

கோபால் பல்பொடியை, இருட்டுக்குள் கண்டு பிடித்து, இடம் வலமாகவும்,வலம் இடமாகவும், மேலும், கீழுமாகவும் பெரு விரலால் தேய்த்து விட்டு கும்மிருட்டில் ஒரு மாதிரி உழண்டி கயிரை கண்டுபிடித்து கையில் பிடித்து மெதுவாக விட முதல் சர..சர என கயிறு ஓடி டமால் எண்டு சத்தம், மாரி தண்ணியில் அரைவாசி முட்டிய கிணற்று தண்ணி வாளி விழுந்து தெறித்து முகத்தில் சில்லென்று அடித்தது, கூடவே அம்மாவின் குரல்.

“அப்பன் என்னடா, கிணறு கவனம்”
அம்மாவின் அக்கறை குரலில் தெரிந்தது
அது ‘வாளி அம்மா” என்று பதில் சொல்லி கொண்டே முகத்தில் தண்ணியை அடித்தேன்.
அந்த மாரி குளிரிலும், கிணற்று தண்ணி சூடாக, இதமாக இருந்தது. தொடர்ந்து தண்ணியில் நிற்க வேண்டும் போல் உணர்வு, ஆனால் தண்ணி உடலில் படாவிட்டால் சில்லென்று குளிர்ந்தது.வாயால் வந்த பனி புகையை, 

சிவராத்திரிக்கு பார்த்த சிவப்பு ரோசாவில், வில்லன் கமல் விட்ட சிகரெட் புகை மாதிரி Style ஆக விட்டேன்.

கும்மிருண்டில, பாம்பு நிற்குமோ? என்ற பயத்தில், கால் நிலத்தில் படாமல் பாய்ந்து ஓடி வீட்டுக்கை வந்து அவசரமாக உடுப்பை மாட்டி கொண்டு வெளியே வர, முற்றத்தில் வெள்ளாட்டு குட்டி அவிழ்த்து விட்ட மகிழ்சியில், பின்னங்கால் இரண்டையும் தூக்கி,  துள்ளி விளையாடியது கொள்ளை அழகாக இருந்தது. வெள்ளாடும் “மே..மே..மே”  என்று தன் கிடா குட்டியை தேடி கத்தியது. 

அம்மா கறந்து  மிச்சம் விட்ட பாலை பருக வா என்று தாய் பாசத்தில் தன் பாசையில் அழைத்தது.

அவசரமாக உடுப்பை சரி செய்தேன். அலுமாரி கண்ணாடியில் முகம் பார்த்து சுருள் முடியை இடப்பக்கமாக கோதி விட்டேன். style ஆக  சத்தியா கமல் மாதிரி ஒரு look விட்டேன்.  கட்டினா அமலா எண்டு ஒரு எண்ணம் வேற மனதில் இருந்தது,  இப்ப நினைத்தால் கொஞ்சம் over ஆக தான் தெரியுது. ஊர் Tution இல் நாங்கள் கொஞ்சம் குழப்படியில் famous. அதை அப்படியே maintain பண்ண வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஓடியது.

அம்மா, அப்ப தான் கறந்த
வெள்ளை ஆட்டு பால் Tea உடன் தயாராக நின்றார்
“அம்மா, நேரம் போட்டுது”
என்று அவசரப் படுத்தினேன்
“இல்லை டக்கென்று ஒரு மொடறு
குடித்து போட்டு ஓடி போ”
வாங்கி ஒரே மொடக்கில்  குடித்து விட்டு முன் வீட்டை எட்டி பார்த்தேன். 

அரிக்கன் விளக்கும் , நான்கு கால்களும் நிழலாக தெரிந்தன.
IPKF யாழ் மண்ணில் அகோர தாண்டவம் ஆடிய  நாள் முதல் பக்கத்து வீட்டு நண்பியும் நானும் சேர்ந்துTuition போவது பாதுகாப்பு எண்டு அம்மாமார் எடுத்த முடிவு. அந்த காலத்தில் அமைதி படை எந்த பத்தைக்க எலி பிடிக்க படுத்திருக்கும் எண்டு ஒருவருக்கும் தெரியாது. சேர்ந்து போனால் ஒரு பாதுகாப்பு எண்டு பெற்றோர் மனதில் ஒரு இயலாமை.

நாங்கள் எங்களுக்க ஒரு முடிவு எடுத்தோம், ஒழுங்கை முந்தல் வரை ஒன்றாக போவது, பலாலி வீதி வந்தால், நீ யாரோ? நான் யாரோ?  ஒரு 100 m ஆவது இடைவெளி விட்டு போக வேணும். அடுத்தது, இந்த விசயம், உற்ற நண்பர்களுக்கு கூட தெரிய கூடாது, தெரிந்தால், பெடியளின் 

பகிடி வதை தாங்க முடியாது. இல்லாது, பொல்லாது கண், வாய், காது எல்லாம் வைத்து கடிப்பான்கள். கதை கட்டி, black board எல்லாம் பேர் எழுதி நாத்தி போடுவான்கள்.

எங்கள் வீட்டு ஒழுங்கை தாண்டினால் ஒரு பெரிய புளிய மரம். வீட்டு ஒழுங்கை மூலையில் நிற்க்கும் புளிய மரத்தை பகலில் கடக்கவே வயிற்றை கலக்கும். அகண்டு விரிந்து பரந்து நிற்கும் மரத்தின் கீழ் பகலிலே இருட்டாக இருக்கும். விடியக்காலையில் கும்மிருட்டாக இருக்கும். அந்த  புளிய மர பக்கத்தில் இருக்கும் இழுப்பை மரத்தில், இரவில் வெளவால்கள் வேறு தங்கி இருந்து, இரவெல்லாம் வினோத ஒலி  எழுப்பும். அந்த காலத்தில் இலுப்பை பழ காலத்தில் வானத்தில் நிறைய வெளவால்களை பார்க்கலாம். இப்ப அவை எல்லாம் எங்க போச்சினமோ தெரியாது.

அந்த புளிய மரத்தில் யாரோ எப்பவோ தூக்கு போட்டு வேற செத்தவயாம், முனி எல்லாம் இருக்கு , இரவு கிட்ட போனால் அவ்வளவு தான் எட்டு கோவில் திருவிழா வெளி வீதியில் வைத்து செட்டியார் சொல்லி மனதில் பயத்தை உண்டாக்கி விட்டான். 

இருவரும் ஒருவர் பின் ஒருவராக கண்ணை மூடி கொண்டு புளியடி கடப்போம். சைக்கிள் சில்லு ஒண்டோட ஒண்டு முட்டுபட்டு விழுற மாதிரி மிதிப்போம்.

அந்த மாரி குளிர் காற்று கண்ணில் பட்டு, கண்ணால கண்ணீர் வந்து காய்ந்து போகும்.

பாம்பு புற்றொண்டு வேறு
புளியடியில் உண்டு. சில சமயம்
ஒரு விதமான வாடை புளியடையில் அடிக்கும்.
நண்பன் ஒரு முறை சொன்னான், அது பாம்பு கொட்டாவி எண்டு, அதற்கு பிறகு
புளியடி கடக்கேக்க , சைக்கிள்
ஆவி கலைத்தும் பிடிக்காத மாதிரி
வானத்தில் பறக்கும்.
புளியடி தாண்டி , நாலு மிதி மிதித்தால்
பாலாலி வீதி. அதிலிம் ஒரு பயம்
ஆமிக்காரன் பதுங்கி இருகிறானோ,
கண்டவுடன் துவக்கை நீட்டுவானோ எண்டு குளிர் பட்டு
கண்ணோரம் கண்ணீர்
எட்டி பார்க்கும் கண்ணை கசக்கி சுற்று முற்றும் பார்ப்பேன்.
இப்படியே பாலாலி வீதி ஏறினவுடன்அப்பாடா எண்டு ஒரு
நிம்மதி. அதிகாலை சந்தைக்குபோவோர் சிலர்
மூட்டைக்கு மேல், மூட்டை கட்டி
வண்டி மிதிப்பார்கள்.மெல்லிய புகாரின் ஊடாக சில ஊர் பரிச்சிய முகங்கள் தெரிவார்கள். சில சமயம், மாட்டு வண்டில் சலங்கை ஒலிக்க, வீறு நடை போடும்.

தம்பி கடை முன்னே, பேக்கரி காரன் சைக்கிளில் பெரிய பெட்டியில கட்டி பாண் இறக்குவான். அந்த “roast பாண்” வாசம்  காத்தில கலந்து வந்து பசி எடுக்க பார்க்கும். 

அப்படியே தம்பி கடை பக்கதில் இருக்கும் பனம் காணியை ஒரு பார்வை பார்ப்பேன்.
ஆச்சி (அம்மம்மா)  நான் சின்னனாக இருக்கேக்கை ஒரு தடவை சொன்னா,
அந்த காணியில் பனம் உச்சியில்
இருக்கும் பனம் கரும் குளவி குத்தி
பொன்னரின் பேரன்
பொட்டெண்டு போட்டான் எண்டு
மனதில பயத்தோட, சில் வண்டு
பறந்தாலும் குளவியோ
எண்டு ஆராய்ச்சி நடக்கும்.
இப்படியே நாலு மிதி மிதித்தால்
பிள்ளையார் கோவில், அரச மரம்
மனதளவில் ஒரு கும்பிடு, இந்த முறையும் math test இல நான் தான்
முதலாவதாக வரவேண்டும்.
திருவெம்பாவை ஆயத்தம் வேற
கோவிலில் களை கட்டும். சில செம்பாட்டு வெள்ளை வேட்டிகளும், நூல் சேலைகளும் கோவில் உள்ளே பய பக்தியாய் கன்னத்தில் போட்டு கொள்ளும். 

கோவில் வீதியோர விளக்கில் வீதி எங்கும் கொஞ்சம் மங்கலாக வெளிச்சம் தெரியும். அப்படியே கோவில் தாண்டினால் சங்க கடை. வாசலில் குட்டை நாய் ஒன்று தெருவில், போவோர், வருவோர் எல்லாரையும்  கலைத்த களைப்பில் சிவனே எண்டு படுத்திருக்கும்.

இன்னும் நாலு மிதி மிதிக்க, இடிந்து விழுந்த பழைய சந்தை கட்டடம் தெரியும். பக்கத்தில் ஒரு கேணியும் உண்டு. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அந்த கேணி குப்பை தொட்டியாக தான் இருந்தது. ஊர் குப்பை எல்லாம் போட்டும் என்னென்று  இந்த கேணி முட்டாமல் இருக்கு எண்டு ஆச்சரியப்பட்டதுண்டு.

கேணி தாண்ட ஆலடி முகப்பு தெரியும் என் முகமும் மலரும், அப்பாடா பாதுகாப்பாக, morning math class வந்து விட்டோம்.  அன்றைய நண்பர்களின் வரவுக்காய், தோழிகளுடனான சீண்டலுக்குமாய் மனம்  ஆவலோட எதிர் பார்க்கும்

மெழுகு திரி
ஒளியில்
தேற்றம் நிறுவிய
கதையும்
தோழிகளிடம்
குறும்பு செய்யும் கதையும்
இன்னும் ஒரு முறை
பார்ப்போம்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *