ஊரெழு மக்கள் ஒருங்கிணைப்புக் கழகம்

urelu_log3

 ஊரெழு மக்கள் ஒருங்கிணைப்புக் கழகம் நோக்கங்கள் – செயற்பாடுகள் – அடைவுகள்

ஊரெழு மண்ணில்; கல்வி கலாச்சார மேம்பாட்டுக்கழகத்தைத் தாயமைப்பாகக் கொண்டு அதன் சேய் அமைப்பாக “ஊரெழு மக்கள் ஒருங்கிணைப்புக் கழகம்;” கனடாவில் இயங்கி வருகிறது. ஊரெழுக் கிராமத்தை மேம்படுத்தும் நோக்குடனும், புலம்பெயர்ந்து வாழும் கனடா மண்ணில் எமது இளம் தலைமுறையினர் மத்தியில் எமது அடையாளத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்குடனும், அவர்கள் ஊரெழு மண்ணின் மைந்தர்கள் என்பதைச் சுட்டிக் காட்டும் நோக்குடனும் இக்கழகம் கனடாவில் இயங்கி வருகிறது. அவ்வகையில், கடந்த நான்கு ஆண்டுகளிற் கடமையே கண்ணும் கருத்துமாகக் கொண்டு இயங்கி வரும் இக்கழகமானது தனது இலக்குகளில் பாதிகளுக்கு மேல் எட்டுயுள்ளது என்பதைக் கூறுவதிற் பெருமையடைகிறது.

எமது மொழி, கலை, பண்பாடுகளில் எமது சிறார்களுக்கு ஆர்வமேற்படுத்தும் முகமாகவும் அவர்களின் திறன்களைக் கண்டு அரங்கேற்றும் முகமாகவும், அவர்களை மேலும் ஊக்குவிக்கும் முகமாகவும், ஆண்டுதோறும் “தீப விழா” என்றோர் அரங்கக் கலைநிகழ்ச்சியை நடத்திவருகிறோம்.
கோடைகாலத்தில் அனைத்துக் கனடா வாழ் மக்களையும் ஒன்றிணைத்துப் பூங்காவில் ஒன்றுகூடல் ஒன்றினையும் நடத்தி வருகிறோம். இவ்வொன்று கூடலில் சிறுவர், பெரியோர்களுக்குப் பல வகையான விளையாட்டுப் போட்டிகளை நடத்தி, வெற்றிபெற்ரோரைப் பாராட்டும் முகமாகவும் ஊக்குவிக்கும் முகமாகவும் அவர்களுக்குப் பரிசில்களையும் வழங்கிவருகிறோம்.
கலைநிகழ்ச்சிகள், ஒன்றுகூடல்களை நடத்தி எமது இளம்தலைமுறையினருக்கிடையே ஒரு நல்லுறவைப் பேணும் முகமாகவும், ஊரெழு மண்ணுக்கு உரித்தான உறவுகள் என்பதை வலியுறுத்தும் நோக்குடனும் இச்செயற்பாடுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. இவை பலரும் அறிந்ததே.

இவ்வாண்டு நாம் பெருமைப்படக் கூடிய வகையில் எமது நோக்கங்களில் முப்பெரும் படிகளை எட்டியுள்ளோம்.

1.ஊரெழு ஒருங்கிணைப்புக்கழகம் ஓர் இணையத்தளத்தை உருவாக்கி உலகத்தில் வாழும் அனைத்து ஊரெழு உறவுகளையும் ஒரு குடைக்கீழ் ஒருங்கிணைத்து வைத்திருப்பது பெரும் வெற்றியே. ஊரெழு உறவுகளை ஒருங்கிணைத்து வைத்திருப்பதுடன், ஊரெழு மண்ணின் மக்களின் கலை, பண்பாடு, வரலாறு ஆக்கியவற்றின் சிறப்புத்தன்மைகளைப் பாரெங்கும் பறைசாற்றி வருவதோடு, ஊரெழு மண்,மக்கள் தொடர்பான அன்றாட நிகழ்வுகளையும் உடனுக்குடன் பதிவு செய்து தரும் ஊடகமாக மட்டுமல்லாது, ஆவணப் பெட்டகமாகவும் விளங்குகிறது. இன்றைய தொழில்நுட்ப உலகத்திற்கு ஈடுகொடுத்தும் எமது இளைய சமூகத்தினரின் அறிவுப் பசிக்கு ஈடுகொடுத்தும் நவீன முறையிற் திகழ்கிறது.

2. பொக்கணை என்ற இம்மலரின் மலர்வு நாம் எட்டியுள்ள இரண்டாவது பெரும் படியாகும். எமது மக்களுக்குள் ஒளிந்திருக்கும் படைப்பாற்றல்களை இனங்கண்டு வெளிக்கொண்டு வருவதோடு, அவர்களின் ழுத்தாற்றலைத் துலக்கி நறுமணமுள்ள மலராக மலர வைப்பதே இம்மலரின் நோக்காகும். இம்மலரானது பண்பாடு, வரலாறு, மருத்துவம், வணிகம், இலக்கியம், விளையாட்டுப் போன்ற பல துறைகளை உள்ளடக்கி உலா வருவது இம்மலரின் சிறப்புத் தன்மையாகும். ~பொக்கணை| என்ற பெயரில் வெளிவரும் இம்மலர் ஊரெழுவில் ஊற்றெடுத்துக் கொண்டிருக்கும் ஊற்றான பொக்கணையின் பெயரைத் தாங்கி வலம் வருகிறது. அதிசயமாக விளங்கும் இவ்வூற்று அமைதியாக அமிழ்ந்து போகாதிருக்க ஆவணமாக்கப்பட்டு வருகிறது. ஊரெழுக் கிராமத்தையே காத்துவரும் இக்குன்று ஊரெழு வரலாற்றுப் பொக்கிஷமாக விளங்குகிறது.இனிவரும் காலங்களில் இம்மலர் முற்றும் முழுதாக ஊரெழு மக்களின் எண்ணங்களால் வடித்த வண்ணங்களாக வருவதே இம்மலருக்கு மேலும் அணிசேர்க்கும்

3.ஊரெழுச் சிறார்களின் கல்வியைக் கருத்திற்கொண்டு மேம்படுத்தும் வகையில் கனடா வாழ் ஊரெழு மக்களின் உதவியுடன் ஊரெழுவில் கணினி வகுப்புகள் ஆரம்பித்து நடத்தப்படுகிறது.

குறுகிய காலத்தினுள் இக்கழகம் பல வெற்றிகளை ஈட்டியுள்ளதென்றால்,

“பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவவானில் நனி சிறந்தனவே”

என்பதற்கமைய அஃது எமது மக்களின் ஊர் பற்றினையும், மண் மணம் மாறாத மக்கள் என்பதையும் உறுதிப்படுத்துகிறது.
அதுமட்டுமன்றி,இக்கழகத்தில் பொறுப்புகளை ஏற்று ஆணிவேராக இயங்கிவரும் ஒவ்வொரு உறுப்பினர்களும்அங்கத்தவர்களும் இக்கழகத்திற்கு உரமிட்டவர்கள்.

காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
(குறள்: 102)

என்பதுபோல், காலமறிந்து ஒவ்வொருவரும் இக்கழகத்திற்கும், எமது ஊருக்கும், நாட்டிற்கும் ஆற்றிய உதவிகள் இவ்வுலகைவிடப் பெரிதே.