கஸ்தூரியின் கவிதைகள்

kasthuri

காலம் அவள் கைபிடித்து நகர்கிறது

உறுதிப்படுத்தப் படாத
உலக அழிவு
ஓர் நாள்
உண்மையாகிப் போனாலும்
அதன் பின் வரும்
யாருமே அறியாத
ஆரம்பம் ஒன்றில்…..
பூபதியின் பெயர்
பொறிக்கப்பட்டிருக்கும்.

பிறிதொரு முறை
பிறந்து வரமாட்டாளட என்பது
பிழையறப் புரிகிறது.
இறந்து போனவர்களுக்குத் தானே
இன்னோர் பிறப்பு
இருக்க முடியும்.

ஆனாலும் உள்ளம்
அவளை அழைக்கிறது
நேற்று வரை
நிலவையும் நட்சத்திரங்களையும்
நிமிர்ந்து பார்த்து
நெடுமூச்செறிந்தவள்

இன்று-
அண்டங்களே அதிசயித்து
அண்ணாந்து பார்த்து நிற்க
புவியீர்ப்புக் கப்பால்
புரையோடி நிற்கிறாள்.
அன்று
உரிமைப் பசிக்கு
உதவி கோரி நின்றோம்

உலகநாடுகள் முன்
தமிழன்
வயிற்றுப் பசியை
வாதாட்டத்திற்கு வைத்தது
வல்லரசு.

அனைத்து நாடுகளும்
அண்ணாந்து பார்த்து நிற்க
உயரத்திலிருந்து விழுந்தன
உணவுப் பொட்டலங்கள்.

ஒரதலைப் பட்சமாக
உள்ளே வந்த வல்லரசால்
அரிசிப் பொதிகள் விழுந்த
அதே குச்சொழுங்கைகளில்!
குப்பெனப் பீறிட்டது
குருதியாறு.

குச்சொழுஙகைகளில் பரவிய
குருதியாற்றுக்குக் குறக்கே
நேரு தேசத்துப் படையிடம்
நீதி கேட்டு
பூகோளம் அதிரப்
பூபதி நடந்தாள்.

அரிசி மூடைகள்
அருகில் இருக்கையில்
சோறின்றி மடிந்த
சோகம் நடந்தது.

முற்றுகைக்குள் சிக்கி
மூச்சுத் திணறிய தமிழுக்கு
காற்றுக் கொடுத்தாள்.
புனிதமான பூமிக்குள்
ஒரு-
பூகம்பத்தின் புகழுடம்பு.
பூபதி
தமிழ்ப்புலர்வின் குடியிருப்பு.

வலம் வந்து வணங்கி
வரலாறு
வாழ்த்துப் பா இசைக்கஇ
பதிவு செய்வதற்குப்
பக்கங்கள் போதாதென்று
சரித்திரம்-
அவள் சாவில்
விக்கித்து நிற்கின்றது.

கணமும் நகராமல்
காற்று அவள்
கல்லறையில் சுழன்று வர
வரலாற்றுப் போக்கில்-தாமும்
வற்றாமல் வாழ்வதற்குஇ
அழியா வரம் பெற்றவளின்
அஸ்தி கேட்டு
காற்றிடம் சமுத்திரங்கள்
கையேந்தி நிற்கின்றன.

காலையில் வந்த கதிரவன்
கல்லறை வெளிச்சத்தில்
கண்கூசிக் கைகூப்ப
மாலையில் வந்த
மஞ்சள் நிலவு-அவள்
கல்லறையின் ஒளியை
கடன் கேட்டு நிற்கின்றது.
அந்தோ…..
இலட்சியவாதியின் சமாதியில்
இயற்கை
இரண்டறக் கலக்கிறது.

தாயே…..!
பிரபஞ்ச வரலாற்றின்
பிரமாண்டமான உச்சியில்
உயிரோட்டத்தோடு
உன்னை நீ
செத்துச் செத்துச் செதுக்கிக்கொண்டாய்.

உசத்தியாகப் பேசப்பட்ட
உலக அதிசயங்கள்
ஒதுங்கி நின்று பார்த்து நிற்க
பிறக்கும் யுகங்களும்
பிரமிப்பில் ஆழ்ந்து நிற்க
காலம்-உந்தன்
கை பிடித்து நகர்கிறது.

அதனால் சொல்லுகின்றோம்
உறுதிப்படுத்தப் படாத
உலக அழிவு
ஒரு நாள்
உண்மையாகிப் போனாலும்

அதற்குப் பின் வரும்
யாருமே அறியாத
ஆரம்பமொன்றிலும்
உந்தன் பெயர்
உயிர்த்திருக்கும்.

விடுதலைப் புலிகள் குரல் 22 சித்திரை – வைகாசி 1991


விடுதலை நெருப்பே!

திக்குகள் அதிர
தீயவர் ஒழிய!
பசியோடு வயிறது
பற்றியெரிய!

விசுபரூபமெடுத்த
விடுதலை நெருப்பே!

உந்தன்
அடிமுடி அறிந்து
அழிக்க முடியாமல்
பிரளயங்கள் அன்று
பின் வாங்கிச் சென்றன.
உன் வெம்மையின் முன்னால்
வெற்றி கொள்ள முடியாமல்
வெறியர் படை
மிரண்டோடியது.
தேசத்தின் தாகமறிந்து
தீர்த்து வைத்த தியாகியே!
விடுதலைக்கு மூச்சுக் கொடுத்தவளே!

காற்றுக்குள் உன்னை
காண்கிறது காலம்.
தண்ணீருக்குள் உன்னை
தழுவுகிறது தமிழ்.
உணவுக்குள் உன்னை
உணர்கிறது உரிமை.

அந்தோ…….
அண்டங்களின் ஐம்புலன்களின்
அறிவுக்கப்பாலும்
நீண்டு நீண்டு செல்லும்
நினைவானவள் பூபதி

~சுதந்திரப் பறவைகள்~
வைகாசி – ஆனி 1991


சரித்திரத்தின் பிரசவிப்பில் சாய்ந்து போன கோபுரம்

தாண்டு போயிருந்த
தமிழன் உரிமைகளை
தோண்டி எடுக்க
துப்பாக்கி எடுத்தவளே!
அதிகாலை ஒன்றிற்காய்
அஸ்தமித்த வேளையில்
உலகத்தின் உள்ளத்தில்
உதயமாகி விட்டாய்.

சோதியா……
சரித்திரத்தின் பிரசவிப்பில்
சாய்ந்து போன கோபுரம்
சரிந்து கிடந்த சந்ததியை
நிமிரச் செய்த
நெம்பு கோல்.

இவளின்
உயிரற்ற உடலை
உள்ளே வைத்திருப்பதால்
காலந்தோறும்
கல்லறை ஒன்று
கௌரவிக்கப்படுகின்றது.

சரித்திரத்தில் உன் சாவு
சகிக்க முடியாதது தான்.
ஆனாலும்இ
சமாளித்துக் கொண்டோம்.
விடியலைத் தடுத்த
வேலிகளைப் பிரிப்போம்.
உரிமைகளைப் பறித்து
உணர்வுகளைச் சிதைக்க வரும்
ஆதிக்க கரங்களை
அக்கினியில் கொழுத்துவோம்.

இறப்புக்கள் தொடர்ந்து
இதயம் வருந்தினாலும்
இலக்கை நோக்கியே
கால்கள் விரையும்இ
கரங்கள் உயரும்.
இரத்தம் வடிந்தாலும்
எங்கள் முகங்கள்
வேதனைத் தீயில் வேகாமல்
வெற்றிக் களிப்பால்
சிவப்பாகட்டும்.

மேஜர் சோதியா நினைவாக எழுதப்பட்டது. “சுதந்திரப் பறவைகள்” 05-06-1990


கொழுந்துக் கூடைகள்

சுரண்டல் தராசுகளில்
கொழுந்துக் கூடைகளை
கொழுவி விட்டு
தேனீருக்காக ஏங்கும் இத்
தேயிலைச் செடிகள்…..
அக்கினியாய் அணிவகுத்து
அவலங்களை எரிப்பதெந்நாள்?

“சுதந்திரப் பறவைகள்” 15-12-1989


நல்லூரும் நம்மவரும்

நல்லூர்த் திருவிழா
நல்லபடி நடந்தது.
இளையோரும் முதியோரும்
இடிபாடு தாங்காமல்
மூச்சடங்கி அங்கோர்
மூலையிலே முடங்கினர்.

இளவட்டங்கள் எல்லாம்
இஷ்டம்போல் வணங்கினர்.
வளம் மாறி வளம் மாறி
வலம் வந்து வணங்கினர்.
கிட்டத்தில் போய் நின்று
தொட்டுத் தொட்டு வணங்கினர்
வள்ளிகளும் தெய்வநாயகிகளும்
வடிவாக வந்ததினால்
கந்தக்கடவுள் – அவர்கள்
கண்களுக்குப் படவில்லை.

தாவணிபிடித்தும் தலையில் பூ வைத்தும்
ஐஸ்கிரீமில்
அரைவாசிப் பாதித்துண்டும்
பக்திப்பரவசத்தில் பண்ணிய காரியங்கள்
பார்த்தோர் மனதை பரவசத்தில் ஆழ்த்தின.

இல்லை…. இல்லை…..
பதைபதைப்பில் ஆழ்த்தின.
ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்ததால்
உருப்படியாய்ப் பெண்கள்
ஊர்போய்ச் சேர்ந்தனர்.


தலை நிமிர்ந்தன…… தர்மமும் தியாகமும்

கோட்டையின் உச்சியிலே
கொழுவிருக்கிறது – தமிழன்
கொள்கைக் கொடி.
தன்மானம் மிக்க
தமிழ்த் தலைவன் பின்னால்
புயலாய் அணிவகுத்த
புலிக் கொடிகள்
பட்டொளி விட்டும்
பறக்கின்றன.

முன்னைய
முற்றுகைகளின் முடிவில்
சந்தனக் கட்டையில் அடுக்கப்பட்ட
சரித்திப் புருஷர்களே!
அன்று
எதிரியவன் எண்ணியிருப்பான்
சடலங்கள் தானே இவை
சாம்பராகி விடும் என்று

ஆனால் நீங்களோ
மண் மூடைகளின் இடுக்குகளில்
மரணிக்காத தோழர்களோடும்
புத்தம் புதிதாய்
போராட வந்த
புதியவர்களோடும்
செத்த பின்பும்
“சக்தி வாய்ந்த வெடிகுண்டாய்”
கோட்டை வாசலிலேயே
குறி பார்த்துக் கிடந்தீர்கள்
உங்கள் இலக்குகள்
ஈடேறி விட்டன.
சாம்பல்களோ
சரித்திரமாகி விட்டன.

மூர்க்கத்தனமான – உங்கள்
முற்றுகையை
முறியடிக்க முடியாமல்
அந்தப் பிணந்தின்னிக் கழுகுகள்
பின் வாசலால்
பின் வாங்கி விட்டன.

ஆக்கிரமிப்பும் அதர்மமும்
அடி சாய்ந்து விழ
கோட்டையில்
தர்மமும் தியாகமும்
தலை நிமிர்ந்து நின்றன.

மரணத்தின் முகடுகளில் நின்றாடும்
மங்களகரமான இலச்சினையை
தன்மானத்தோடு
தமிழன் நின்று
தலை நிமிர்ந்து பார்க்கிறான்.
தமிழ் உலகம்
தலை நிமிர்ந்து பார்க்கிறது.

“சுதந்திரப் பறவைகள்” புரட்டாசிஇ ஐப்பசி 1990


விண்ணுலக வேங்கைக்கு……..!

விண்ணுலகில் வீற்றிருக்கும்
மண்ணுலக மறவனே! உன்னை
மறைந்து விட்டாய் என்று
நாம் மறந்து விடவில்லை
நீ மறைந்து போகவில்லை…. எங்கும்
செறிந்து வாழ்கிறாய்.
உருவமாய் ஊரில் திரிந்தாய் – இன்று
அருவமாய் அவனியில் ஜொலிக்கிறாய்.
உன் அஸ்தமன அதிர்வால்
உருவாகிய உதயங்களே அதிகம்.
அப்போதெல்லாம்……
எத்தனை வீடுகள் ஏறி இறங்கினாய்.
எத்தனை நிகழ்வுகள் எடுத்துக் கூறினாய்
நிகழ்வுகள் எம்மைத் தாக்க மாட்டாதென
அத்தனை பேரும் ஏசி எதிர்த்தனர்.
இப்பொழுது…..
அதிகமாகவே வருகின்றனர்.
ஏன் எதற்கென்று யாரும் கேட்பதில்லை.
நீ மரணித்த பொழுதில்….
அவர்கள் மனிதராகி விட்டனர்!
உன் மறைவால் உருவானது
வெற்றிடம் அல்ல…….
மிகை நிரம்பல்…….
அன்று நீ…….
தனித்து தவித்து நின்றாய்.
இன்று நாம்……..
எதிர் பார்த்துக் காத்திருக்கிறோம்!
இன்னமும்…..
நீ அணிந்த அதே ஆடைகளோடுஇ
நீ அருந்திய அதே ஆகாரத்தோடுஇ
இன்று ஆட்கள் அதிகம்….
ஆயதங்களும்…….. அப்படியே.
நீ உயிரைக்கொடுத்து தட்டிப் பறித்தவையும்
இன்றும்…….. எம்மிடம்…….
தூசி படியாமல் துப்பரவாயுள்ளன.
அன்று உனக்காக தொங்கிய தோரணங்கள்
இன்னும் தொடர்கின்றன.
உனக்காக இசைத்த முகாரி
இன்னமும் மோகனராகம் பாடவில்லை.
உனக்காக சிந்திய நீர்த்திவலைகள்
இன்றும்…. சற்று அதிகமாகவே சிந்துகின்றன.
இன்றும் பிரிவுத்துயரை பகிர
அதிகம் பேர் உள்ளனர்.
ஒருவன் உன்னிடம் வருகையில்….
ஓராயிரம் பேர் எம்மிடம் வருகின்றனர்.
ஒன்று மட்டும் உண்மை!
நாளை தேசியக் கொடியின் வருகைக்காக
இன்று காற்றில் பறக்கும்…..
கறுப்புக் கொடிகளே அதிகம்.
ஆனாலும்…..
உங்கள் கல்லறைகளில் மண்டியிட்டு
நாம் – கண்ணீர் வடிக்கவில்லை!
சபதம் எடுத்து….
இலட்சியப் பணிதொடர்கிறோம்.
என்ன பார்க்கிறாய்?
எதிதுபார்ப்புக்களை நிறைவேற்றி
என்றோ ஓர் நாள்…..
நிச்சயம் வருவோம்.
அதுவரை…..
மறைந்திருந்து மலர்தூவி வாழ்த்து.

“சுதந்திரப் பறவைகள்” வைகாசி – ஆனி 1987